ETV Bharat / state

TNPSC அறிவிப்பு: தமிழகத்தில் நிலுவையில் உள்ள அரசு பணிகள் நிலை? 40 லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக்குறி

author img

By

Published : Dec 18, 2022, 6:29 AM IST

Updated : Dec 18, 2022, 9:40 AM IST

TNPSC அறிவிப்பு: ஏமாற்றமடைந்த போட்டித் தேர்வர்கள் குமுறல்
TNPSC அறிவிப்பு: ஏமாற்றமடைந்த போட்டித் தேர்வர்கள் குமுறல்

பல்வேறு சமூக நிர்ப்பந்தங்களுக்கிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் எங்களுக்கு ஏமாற்றமே என மனமுடைந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

TNPSC அறிவிப்பு: ஏமாற்றமடைந்த போட்டித் தேர்வர்கள் குமுறல்

மதுரை: பல்வேறு குடும்ப, சமூக நிர்ப்பந்தங்களுக்கு நடுவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஆனால் ஓராண்டு எந்தவித தேர்வுகளும் இல்லாமல் தள்ளிச் செல்வது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்கள் கூறுகின்றனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர் சுதாகரன் கூறுகையில், 'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வருகிறேன். இந்த ஆண்டு நான் எதிர்பார்த்த முடிவு வரவில்லை. ஆகையால் வருமாண்டு தேர்வு அட்டவணையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இடம் பெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தற்போது பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளேன். தற்போது படிப்பதா..? அல்லது கிடைக்கும் வேலைக்குச் செல்வதா..? எனும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்' என்றார்.

மாற்றுத்திறனாளி பெண் தேர்வர் அபிராமி கூறுகையில், 'கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெரிதும் கஷ்டப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தமிழ்நாடு போட்டித் தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வருமாண்டு தேர்வினை அறிவித்து அதிக எண்ணிக்கையில் பணியிடங்களையும் அறிவிக்க வேண்டும்' என்றார்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் தங்களது நண்பர்களோடு இணைந்து தேர்வுக்கு தயாராகும் நந்தினி, அமிர்தஹர்சினி மற்றும் ஜோதிசெல்வம் ஆகியோர் கூறுகையில், தற்போதைய டிஎன்பிஎஸ்சி-யின் தேர்வு அட்டவணை காரணமாக எங்களின் முயற்சி மேலும் ஓராண்டு தாமதமாகிறது. இங்கு படிக்க வரும் தேர்வர்களுக்கு அவரவர் குடும்பங்களில் பல்வேறு வகையான அழுத்தங்கள் உண்டு. எத்தனை ஆண்டுகள் தான் படித்துக் கொண்டே இருக்க முடியும்?

இதுவரை மேற்கொண்ட கடுமையான உழைப்பை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கும் செல்ல முடியாத மன உளைச்சல். மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பணியிடங்களை அறிவிக்கிறார்கள். மொத்த பணியிடங்களைக் கூட ஒவ்வோராண்டும் ஐநூறு, ஆயிரம் என அறிவிக்க வேண்டும். வேறு வேலைகளுக்கும் கூட தையல், ஜவுளிக்கடை என்று தான் எங்களால் செல்ல முடியும். ஊதியத்தை அதிகமாக்கி பணியிடங்களை குறைப்பது தவறான ஒன்று.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். இந்தாண்டு தேர்வு அறிவித்த நிலையில் நாங்களும் எழுதினோம். ஆனால் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆர்வமாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகின்ற எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கடந்து முயற்சி மேற்கொள்கிறோம்.

தற்போது தேர்வே அறிவிக்கப்படவில்லை எனும் போது சோர்வு ஏற்படுகிறது. திருமணமாகி குழந்தைகள் உள்ளவர்களும் கூட இங்கே வந்து போட்டித் தேர்வுகளுக்காக படித்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ்நாடு அரசு நம்பிக்கையூட்ட வேண்டும். பல்வேறு குடும்ப, சமூக நிர்ப்பந்தங்களையெல்லாம் கடந்து தான் தேர்வர்கள் நாங்கள் தயாராகி வருகிறோம்.

மதுரைக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நபர்களும் எங்களைப் போன்றே உணவு, தண்ணீர் எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்வதுபோல் வந்து போட்டித் தேர்வுகளுக்குப் படித்துச் செல்கிறார்கள். இங்கு தயாராகின்ற எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடுமா என்றால் இல்லை.

ஆனாலும் நம்பிக்கையோடு மேற்கொள்ளும் எங்களது முயற்சியில் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்ணில் வாய்ப்பைத் தவற விட்டவர்கள், அடுத்த வாய்ப்பை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். அதுபோன்ற நபர்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு பெரிய ஏமாற்றம்தான்' என்றனர்.

இதையும் படிங்க: Christmas special: தொழுநோயில் இருந்து மீண்டவர்களின் அசத்தலான மெழுகுவர்த்திகள்.!

Last Updated :Dec 18, 2022, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.