ETV Bharat / state

கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய கண்டன சுவரொட்டியால் பரபரப்பு!

author img

By

Published : Jul 25, 2023, 1:03 PM IST

congress party
கார்த்தி சிதம்பரம்

மதுரை நகர் பகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய கண்டன சுவரொட்டியால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய கண்டன சுவரொட்டியால் பரபரப்பு!

மதுரை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்வானவர் கார்த்தி் சிதம்பரம். இவரது தந்தை ப.சிதம்பரம் முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தது மட்டுமன்றி அக் கட்சியின் உயர் மட்ட அளவில் மிகவும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தனது மனதில் பட்ட கருத்துக்களை தயக்கமின்றி தெரிவிப்பவர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளிடமும் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். மேலும், தனது கட்சியின் நிர்வாகிகளைக் கூட மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது, தங்கள் பகுதிக்கு வரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் மனுக்களை வழங்கி வருகின்றனர். மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும் கார்த்தி சிதம்பரம், இதுவரை காங்கிரஸ் கட்சி சின்னம், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படம் கொண்டு அச்சிடப்பட்டு இருந்த தனது லெட்டர் பேடில் பதில் அளித்து வந்தார்.

தற்போது அவற்றைத் தவிர்த்துவிட்டு தனது பெயர் மட்டும் உள்ள லெட்டர் பேடில் பதில் அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது கட்சி முன்னோடி தலைவர்களின் படங்களை தனது லெட்டர் பேடிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் கே.ஆர்.இராமசாமி மற்றும் கார்த்தி சிதம்பரம் என இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், தற்போது காங்கிரசாரின் கோஷ்டி மோதல் வீதிக்கு வந்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விவகாரம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். கார்த்தி சிதம்பரத்தின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:சிறையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு - சிறை காவலர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.