ETV Bharat / state

ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்!

author img

By

Published : Aug 14, 2023, 10:33 PM IST

Etv Bharat
Etv Bharat

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியிலும், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் அறிவுசார் குறைபாடுடைய மதுரை மாணவர்கள் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்

மதுரை: சிக்கந்தர் சாவடி அருகே பெத்சான் சிறப்புப் பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுடையோர், ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமன்றி, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

இயல்பான விளையாட்டு வீரர்களே சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு கடுமையாக முயற்சிக்கும் நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர்கள், வாலிபால் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், மூன்று மாண்வர்கள் ஃபுட்சல் விளையாட்டில் நான்காமிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக முதலமைச்சர் கோப்பைக்கான எறிபந்து விளையாட்டில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இதுகுறித்து பெத்சான் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ஐசக் கூறுகையில், "இதுபோன்ற சிறப்பு பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் பங்கேற்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில், பெத்சான் பள்ளியிலிருந்து 5 பேர் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். இது மதுரைக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமையாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த ஆண்டு இந்திய அணி சார்பாக 198 வீரர்கள் ஜெர்மனி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர்.

அவர்களில் தமிழகத்திலிருந்து 16 பேர் இடம் பெற்றனர். மதுரை மாவட்டத்திலிருந்து ஆறு பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 5 பேர் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்களாவர். தமிழக முதல்வரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 28 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தின் சார்பாக எங்கள் பள்ளி வீரர்கள் 6 பேர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு தொடர்ச்சியான பயிற்சியும் ஊக்கமும் அளித்து வந்தால், மிகப் பெரிய வெற்றியை ஈட்ட முடியும் என்பதற்கு எங்கள் பள்ளி வீரர்களே எடுத்துக்காட்டு. வருகின்ற 2027-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளிலும் மதுரையில் இருந்து வீரர்கள் பங்கேற்பது மிக சாத்தியமான விசயம்தான்" என்றார்.

பெத்சான் பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், "சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது மாணவர்கள் தொடர்ச்சியாக பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். ஆனால் தங்களது கடுமையான உழைப்பு, பயிற்சி மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மூலமாகத்தான் இதனை எங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை பதினைந்து வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளோம். 13 பேருக்கும் மேல் பதக்கங்களை வாங்கியுள்ளனர். இதுபோன்ற குழந்தைகளை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செய்வது பெரும் சவால். அதிலும் அவர்களை வெல்ல வைத்து பதக்கங்கள் பெறுவது அதைவிட சவாலான விசயமாகும்.

சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இதுபோன்ற வெற்றிகள் பெரும் ஊக்கத்தைத் தரும். தற்போது மத்திய, மாநில அரசுகளும் இந்தக் குழந்தைகளை ஊக்குவிக்க பல்வேறு பரிசு மற்றும் தொகைகளை அளித்து வருகின்றனர். அது இவர்களின் வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவும். இவர்களுக்கு அரசுப்பணியிலும் முன்னுரிமை உண்டு.

எங்கள் பள்ளியில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்கள் தற்போது மத்திய, மாநில அரசுப் பணிகளில் உள்ளனர். இந்த வாய்ப்புகளை சிறப்பு குழந்தைகளும் அவர்தம் பெற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

ஜெர்மனிக்குச் சென்ற வீரர்கள் கமலேஷ் மற்றும் மாதேஷ் ஆகியோர் கூறுகையில், "மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்ற பிறகே தேசிய அணிக்குத் தேர்வானோம். ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம் வென்றது பெரும் சாதனையாகும்.

அதே நேரம், தங்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வெல்லும் அளவிற்கு எங்களைத் தயார் செய்த எங்களது ஆசிரியர்களுக்கும் எங்களது பெற்றோர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு அடுத்து வருகின்ற வீரர்களும் இதுபோன்று பதக்கங்களை வெல்ல வேண்டும்" என்றனர்.

மாதேஷின் அக்கா தனுஜா கூறுகையில், "எனது தம்பியை கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் சேர்த்தோம். குழந்தையாக இருக்கும்போதே எதையும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் மாதேஷ் இருந்தார்.

பெத்சான் பள்ளியில் மாதேஷீக்கு அளித்த சிறப்பான பயிற்சியின் வாயிலாக தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாலிபால், எறிபந்து போன்றவற்றில் பெரிதும் ஆர்வம் இருந்த காரணத்தால், அதில் தயார்படுத்தினர்.

கடந்த முறை சிறப்பு ஒலிம்பிக்குக்கு இங்கிருந்து சென்ற வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று வந்தது, மாதேஷூக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. அதன் காரணமாகவே தற்போது சர்வதேச ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்றார்.

வெற்றி பெற்ற இந்த வீரர்கள் குறித்து பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, "இவர்கள் சாதனைக் குழந்தைகள். நாம் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உண்டு. இவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நான் வியக்கிறேன்" என்றார். அதுதான் உண்மை. இவர்கள் அறிவுசார் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள் அல்ல வியப்பிற்குரிய திறமைகள் பல படைத்த சாதனைக் குழந்தைகள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உலக கவனத்தை ஈர்க்கும் தமிழகம்.. பன்னாட்டு விளையாட்டு மையமாக மாறுவதால் மக்களிடையே பெருகும் ஆர்வம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.