ETV Bharat / state

அடடே..! கீழடி அருங்காட்சியகத்தில் சைகை மொழியில் விளக்கம்.. அசத்திய மதுரை பெண்கள்!

author img

By

Published : May 14, 2023, 8:35 AM IST

கீழடி அருங்காட்சியகத்தை சைகை மொழியில் ரசித்த பெண்கள்
கீழடி அருங்காட்சியகத்தை சைகை மொழியில் ரசித்த பெண்கள்

கீழடி அருங்காட்சியகத்தை மாற்றுத்திறனாளி பெண்கள், சைகை மொழிகளில் உணர்வோடு கலந்து ரசித்தது பிற பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கீழடி அருங்காட்சியகத்தில் சைகை மொழியில் விளக்கம்

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி கள அருங்காட்சியகம், தற்போது பிரபல சுற்றுலாத் தளமாக உருவெடுத்து வருகிறது. நாள்தோறும் அதிகளவிலான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து, ஒவ்வொரு அரங்குகளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

அதேநேரம், தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மதுரை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தில் இருந்து மாற்றுத்திறனாளி பெண்களான ரம்யா, தாரணி, யோகேஸ்வரி, ஜெஸிமா, ராஜலட்சுமி, வித்யா, பெருமி, அபி, முத்துகாளீஸ்வரி மற்றும் பிரியங்கா ஆகிய பத்து பேர் கொண்ட குழு, நேற்று (மே 13) கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர்.

அப்போது, அந்தக் குழுவைச் சேர்ந்த வித்யா, அங்குள்ள படங்கள் மற்றும் தொல்லியல் பொருட்கள் குறித்து சைகை மொழியிலேயே வந்திருந்த பிற பெண்களுக்கு விளக்கினார். இந்த விளக்கத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மற்ற பெண்கள் சைகை மூலமாகவே கேள்வி எழுப்பினர். அதற்கு, வித்யா அதே சைகை மொழியில் அழகாக விளக்கினார்.

இதனையடுத்து தெளிவாகவும், அழகாகவும் விளக்கிய வித்யாவுக்கு கைகளை உயர்த்தி, உள்ளங்கைகளை அசைத்து மற்ற பெண்கள் பாராட்டு தெரிவித்த விதம் பிற பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து தாரணி கூறுகையில், “கீழடி போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்ப்பதில் எங்கள் குழுவினருக்கு எப்போதுமே அலாதியான ஈடுபாடு உண்டு. இன்றைக்கு நேரம் கிடைத்ததால் ,எல்லோரும் புறப்பட்டு வந்தோம்.

எங்களில் சிலர் தையல் தொழில் செய்கிறோம். சிலர் அரசு பயிற்சி நிறுவனங்களில் பயின்று வருகிறோம். கீழடியில் நமது பண்டைய கால மக்களின் வாழ்வியல் எச்சங்களைப் பார்வையிட்டது, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்திய உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரும்பால் ஆன நங்கூரம் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.