ETV Bharat / state

‘அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!

author img

By

Published : Jul 27, 2023, 11:03 PM IST

அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

திமுக பைல்ஸ் 2-ல் குறிப்பிட்டுள்ள திமுக அமைச்சர்களின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு லஞ்சம் இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

மதுரை: 'என் மண் என் மக்கள்' யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கவுள்ளார். இதற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அறுவடைக்குத் தயாராக உள்ள நிலத்தில் ராட்சத இயந்திரங்களை இறக்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது ஏற்புடையது அல்ல. அக்குறிப்பிட்ட நிலத்தை மாநில அரசுதான் கையகப்படுத்தி என்எல்சி-க்கு வழங்குகிறார்கள் என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த குறிப்பிட்ட நிலங்களை இந்த நேரத்தில் கையகப்படுத்துவது முறையல்ல. இதுகுறித்து நாங்கள் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். நிலம் கொடுத்த அனைவருக்கும் என்எல்சியின் விரிவாக்கப்பணிகளில் வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் அதேபோன்று எடுக்கப்பபடும் நிலத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். தற்போது என்எல்சி நிர்வாகம் மேற்கொண்ட செயலுக்கு என்னுடைய கண்டனத்தை தொலைபேசி வாயிலாக நான் தெரிவித்துள்ளேன்.

என்எல்சியின் விரிவாக்கப் பணிகள் வெவ்வெறு அரசுகளின் காலகட்டத்தில் நடைபெற்று வந்தன. நிலத்தை கையகப்படுத்துவது, கையகப்படுத்தும் முறை, அதற்காக வழங்கப்படும் காப்பீடு என பல பிரச்னைகள் உள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளின் அனுமதியைப் பெற்றுதான் நிலம் கையப்படுத்துவதையே மேற்கொள்ள முடியும். இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு உண்டு.

தற்போது என்எல்சியின் விரிவாக்கப்பணிகளை நிறுத்தினால், 16 ஆயிரம் தமிழர்கள் வேலை இழப்பை சந்திக்க நேரிடும். நிலத்தைக் கையகப்படுத்தும் முறையை சரியாகப் பின்பற்றி முறைப்படி இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்தை வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் பாஜக-வின் நிலைப்பாடு. இதுதான் ஆக்கப்பூர்வ தீர்வே தவிர, இதை அரசியலாக்குவது தீர்வைத் தராது” என்றார்.

ஆறு அமைச்சர்களின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆட்சியில் நடைபெற்ற மூன்று ஊழல் புகார்கள் குறித்தும், ஆறு அமைச்சர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய பினாமிகள், யாருடைய பெயரில் வசூல் நடைபெறுகிறது என்பது குறித்தெல்லாம் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். கடந்த முறை திமுகவினரின் சொத்துப்பட்டியல் குறித்து பொதுமக்களிடம் பரவலாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

தற்போது ஆளுநரிடம் நேரடியாகக் கொடுத்ததற்குக் காரணம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆறு அமைச்சர்களின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். தமிழ்நாடு லஞ்ச, லாவண்யம் இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள நோக்கம். அமைச்சர் பொன்முடியின் 41 கோடி ரூபாய்க்கு வைப்புத் தொகை வைத்துள்ளார் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

அதைவிட்டுவிட்டு யாரோ எழுதிக் கொடுத்ததை வந்து ஒப்பித்துக் கொண்டிருப்பது முதலமைச்சருக்கு அழகல்ல. முதலமைச்சர் இதுபோன்று பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்காது. அந்தந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்காகத்தான் கேந்திரிய வித்யாலாய பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆகையால் அந்தக் குழந்தைகளுக்கு தமிழ்தான் முக்கியம். அவ்வாறு இயங்காத பள்ளிகள் குறித்து நான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைவருக்கு கடிதம் எழுதுவேன்” என்றார்.

மணிப்பூருக்கான தீர்வு மணிப்பூருக்குள்தான் உள்ளது: தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூரைப் பொறுத்தவரை அது ஒரு சிக்கலான மாநிலம். 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் மணிப்பூர் எப்படி இருந்தது? அங்குள்ள உட்குழுக்களால் மிகப் பெரும் பிரச்னைகள் நிலவி வந்தன. இதனால் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது மணிப்பூர் எப்படி வளர்ச்சியடைந்துள்ளது? இரண்டு சமூகங்களுக்கிடையிலான போராட்டம், உயர் நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது.

முன்னர் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் இன்று நீக்கப்பட்டுள்ளது. காரணம், உண்மையான ஜனநாயகத்தை மணிப்பூர் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மணிப்பூருக்கான தீர்வு மணிப்பூருக்குள்தான் உள்ளது. தற்போது அங்குள்ள ஏழு மாநிலங்களுமே அமைதியை நோக்கி திரும்பியிருக்கின்றன. மணிப்பூரில் உள்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு - சிபிஐ விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.