ETV Bharat / state

'ஆசிட்' தாக்குதலுக்கு ஆளானவர் நாடாளுமன்றத்திற்கு போட்டி - வைராக்கியத்துடன் நடைபோடும் சிங்கப்பெண்

author img

By

Published : Dec 12, 2022, 2:12 PM IST

Updated : Dec 12, 2022, 3:03 PM IST

Etv Bharat
Etv Bharat

தன்னுடைய 19ஆவது வயதில், தன்னை ஒருதலையாய் காதலித்தவனின் திராவக வீச்சில் முகம் சிதைந்து, பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு, இன்றைக்கு நம்பிக்கைக்குரிய நாயகியாய், நேபாள நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளார்.

மதுரை: நேபாளத்திலுள்ள மக்வன்பூர் மாவட்டம் ஹெட்டாடா நகரத்தில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாளானது வழக்கம்போல் எல்லோருக்கும் நன்றாகத்தான் விடிந்தது. ஆனால் பிந்தபாசினி கன்சகர் என்ற 19 வயது பெண்ணுக்கு மட்டும் அந்த துயர சம்பவம் நடக்கும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. வழக்கம்போல தனது ஃபேன்ஸி ஸ்டோரை திறந்து கடையில் பிந்தபாசினி அமர்ந்திருந்தார்.

காலை 11 மணியளவில், திலீப்ராஜ் கேசரி என்பவர் கையில் சிறிய பாட்டிலோடு வந்தார். இதனைக் கண்ட பிந்தபாசினி என்னவென்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென அந்தப் பாட்டிலின் மூடியைத் திறந்து பிந்தா முகத்தில் வீசினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பிந்தபாசினி நிலை குலைந்தார்.தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் பிந்தாவின் அழகிய முகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆசிட் தாக்குதல் நடத்திவிட்டு திலீப்ராஜ் தப்பிச் சென்றார்.

பிந்தபாசினி
பிந்தபாசினி

உயிர்போகும் வலியில் துடித்த பிந்தாவை, அவரது பெற்றோர் உடல் முதுவதும் தண்ணீர் ஊற்றி சற்று ஆசுவாசப்படுத்தினாலும், தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூன்று கட்டமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

ஆனாலும் முகத்தை நல்ல வண்ணம் சீரமைப்பதற்கு போதுமான மருத்துவ வசதிகள் நேபாளத்தில் இல்லாத நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘தேவதாஸ்’ மருத்துவமனையில், இதற்குரிய சிறப்பு சிகிச்சை அளிப்பதைக் கேள்விப்பட்ட பிந்தபாசினி, சிகிச்சைக்காக நேபாளத்தில் இருந்து மதுரை வந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் தன்னைப் போன்றே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராக தன்னை ஒரு தீவிர செயற்பாட்டாளராக முன்னிறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வாட்ஸ்அப் வழியாக பிந்தபாசினி கன்சகர் அளித்த தனிப் பேட்டியில், “ஆசிட் அட்டாக் என்பது உலகின் மிகக் கொடூரமான குற்றமாகும். உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்களில் திராவக வீச்சிலிருந்து தப்பிய எவரும் இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

தேசிய சுதந்திரக் கட்சி
தேசிய சுதந்திரக் கட்சி

நேபாளத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் நாடாளுமன்றத்தில் செயல்படும் விதத்தை மாற்றும் நோக்குடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் எங்களது தேசிய சுதந்திரக் கட்சி. புதிய கட்சி மட்டுமன்றி, இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாகவும் திகழ்கின்ற காரணத்தால் நான் இந்தக் கட்சியைத் தேர்வு செய்தேன்” என்றார்.

பெரும்பான்மை வாக்கு மற்றும் பிரதிநிதித்துவ வாக்கு எனும் இரட்டை முறையில் நேபாள நாடாளுமன்றம் செயல்படுகிறது. அந்த அடிப்படையில், தற்போதைய பிரதமர் ஷெர் பகதூர் துபே தலைமையிலான நேபாள காங்கிரஸ் 89 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் போட்டியிட்ட 12 அரசியல் கட்சிகளில் 7 கட்சிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அதில் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது தேசிய சுதந்திரக் கட்சி. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக, பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்பட போட்டியிட்டவர்களில் ஒருவர்தான் பிந்தாபாசினி என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்தபாசினி மேலும் கூறுகையில், “நேபாள நாடளுமன்றத்தில் என்னுடைய பிரதிநிதித்துவம் என்பது திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொண்டவர்களுக்குமானதாக இருக்கும். குறிப்பாக எங்களது நேபாள நாட்டில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை மையம் இல்லை. எனவே நேபாளத்தில் தீக்காய மருத்துவமனையை நிறுவுவதே எனது முக்கிய குறிக்கோள்.

அதுமட்டுமன்றி, இந்த கொடூரமான குற்றச்செயல் குறித்து உலக அரங்கில் எதிரொலிக்கப்பட வேண்டும். அதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்களை எளிதாகக் கடந்து செல்வது வேதனையான ஒன்று. வாய்ப்பு கிடைத்தால் இந்த வேதனையை அனுபவித்த உலகின் பல லட்சக்கணக்கான பெண்களின் சார்பாக எங்களது நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தில் நான் பணியாற்றுவேன்” என்றார்.

குடும்பத்தினருடன் பிந்தபாசினி
குடும்பத்தினருடன் பிந்தபாசினி

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய பிந்தா, அப்போது ஆடை வடிவமைப்புத் துறையில் சாதிப்பதுதான் தன்னுடைய குறிக்கோள் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில் நுழைந்து, அதன் வடிவமைப்பை மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட உலகப் பெண்களுக்காகவும் குரல் கொடுக்க முயன்றுள்ளார்.

பிந்தபாசினி
பிந்தபாசினி

இதையும் படிங்க: முடங்கி வாழ்வதற்காகப் பிறக்கவில்லை: திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட சிங்கப்பெண்!

Last Updated :Dec 12, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.