ETV Bharat / state

’சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

author img

By

Published : Jun 12, 2021, 9:39 PM IST

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அதிமுக இருபெரும் தலைமையின் கீழ் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

‌பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி முழுமையாக இந்த துறையை அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொன்னேன். தற்போதைய, கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவியேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. முதலில் அவர் துறையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

கூட்டுறவுத்துறை புகார் குறித்து தற்போதைய அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கலாம். எங்கள் மீது வழக்கு தொடரலாம். கூட்டுறவுத்துறையில் மோசடி செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தான் என்ற ரீதியில் அதிமுக கட்சியையும் ஆட்சியையும் நடத்தினோம்.

கட்சியில் தவறு செய்தவர்கள் மீது இந்த அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க தயாராக உள்ளோம். மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் படுத்தப்பட்டுள்ளன. காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிகளவு விவசாயிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது எங்களுடைய ஆட்சிதான்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
திமுக ஆட்சியை குறை சொல்ல விரும்பவில்லை. அமைச்சர்கள் தெரிந்து கொண்டு பேசினால் போதும் என கூறுகிறோம். தளர்வுகளற்ற ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் திறக்ககூடாது என முதலமைச்சரின் குடும்பமே தெருவில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது, டாஸ்மாக் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. கூட்டுறவுத்துறை புகார் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டலும் திமுகவினர் நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறோம்.தமிழ் கலாச்சாரத்தை இலக்கியத்தை இதுவரை எந்தப்பிரதமரும் பேசியதில்லை. தமிழை பற்றி, தமிழர்களை பற்றி பேசும் நல்ல பிரதமர் மோடி. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அதிகளவில் தடுப்பூசிகளை பெறுவார் என மக்களோடு சேர்ந்து நாங்களும் நம்புகிறோம்.

வணிக வரித்துறை அமைச்சர் மதுரையில் டிரான்ஸ்பார்மருக்கு மாலை போட்டு திறந்து வைத்திருப்பது சற்று தூக்கலாகவே தெரிகிறது. மதுரையில் இரண்டு அமைச்சர்களில் வணிக வரித்துறை அமைச்சர் சிறப்பாக பணி செய்கிறார். எங்கள் ஆட்சி தற்போதும் தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம்.

சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருபெரும் தலைமையில் கட்சி சென்று கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எங்களுடைய பொதுக்குழுச் செயற்குழு கூடி முடிவெடுப்பார்கள். அதைப்பற்றி நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது’’ என கூறினார்.

இதையும் படிங்க: இளம்பெண் தற்கொலை வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.