ETV Bharat / state

தண்ணீர் பிரச்சனைக்காக மீண்டும் ஐடியா கொடுக்கும் செல்லூர் ராஜூ... மதுரைக்கு இதுதான் தீர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 8:55 AM IST

Updated : Oct 5, 2023, 6:45 PM IST

EX Minister Sellur Raju press meet: மதுரையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால், இனிவரும் 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

EX Minister Sellur Raju press meet
மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மதுரை: மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 71வது வார்டு தெற்கு தெரு நியாய விலைக்கடை மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட அடிக்கல் நாட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "மதுரை மேற்கு தொகுதி, பழங்காநத்தம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றினோம். மேலும், 15 லட்சம் ரூபாய்க்கு கூடுதல் கட்டடம் கட்டினோம். மேற்கூரை அமைத்தல், வளாகங்கள் அமைத்தல் என ரூ.50 லட்சத்திற்கு மேலாக தத்தெடுத்ததுபோல் பள்ளிகளுக்கு பல்வேறு பணிகளை செய்தோம்.

இதனால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2 மாணவிகள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. மேற்கு தொகுதி மேம்பாட்டிற்காக ரூ.60 லட்சம் செலவில் இப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து அமைச்சர் நேருவிடமும் தெரிவித்து, பணியை விரைவுபடுத்தக் கூறியுள்ளோம். குடிநீர் திட்டப் பணிகளை நிறைவாக முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டபோது, டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர். ஆனால், பணிகள் எந்த அளவு நடைபெற்று வருகிறது என தெரியவில்லை. விரைவாக முடிக்க வேண்டும் என நகர்ப்புறத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் தலையிட்டு, இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வசூல் செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் பதிப்பது தொடர்பாக 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை கண்காணிக்க வேண்டும்.

முடிக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் பம்பிங் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு, வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் முழுமை பெற வேண்டும். அவசர கதியில் இந்த குடிநீர் திட்டப்பணிகளை செய்யக்கூடாது. ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த திட்டத்தினை சிறப்பாக செய்ய வேண்டும். சாக்கடை கலப்பு இருக்கக் கூடாது. ஏற்கனவே பாதாளச் சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தினோம்.

ஆனால், திமுக ஆட்சியில் டெண்டரை மாற்றி, இந்த திட்டத்தில் குளறுபடியானது. அதனால் சாலை எங்கும் கழிவு நீர் செல்லும் அவலம் இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தினால், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் பயன் பெறும். இதனால், வரும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்னை இருக்காது.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்ததுபோல், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் விளையாட்டு அரங்கங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். என்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் காண்பிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ளன. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் விரைவாக செய்ய வேண்டும்.

அதேபோல், மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகளையும், அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் நகரங்களில் இருப்பதுபோல, மதுரையிலும் இருக்க வேண்டும். தென்மாவட்ட வீரர்கள் இந்த விளையாட்டு அரங்கையே நம்பியுள்ளனர்.

நான் என்னுடைய தொகுதியில் குறைகள் இருப்பதாக மனு அளித்தேன். ஆனால் அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. கேட்டால் துறை அமைச்சர்களிடம் அனுப்பி உள்ளோம் என தெரிவிக்கின்றனர். எனவே, அதனையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும். தற்போது அதிமுக கூட்டத்தில் கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்.

பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறும் ஆணையாளர் ராதாகிருஷ்ணனுக்கே டெங்கு பரவி உள்ளது. அவர் இந்த துறையில் இருந்தது முதலே தற்போது வரைக்கும் மிகவும் கவனமாக இருப்பார். அவருக்கே டெங்கு வந்தது என்பது மோசமான ஒன்று. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..!

Last Updated :Oct 5, 2023, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.