ஓசூரில் ஏர் கம்ப்ரசர் வெடித்து விபத்து; கை-கால்கள் முறிந்த நிலையில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓசூரில் ஏர் கம்ப்ரசர் வெடித்து விபத்து; கை-கால்கள் முறிந்த நிலையில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air Compressor explosion accident: பஞ்சர் கடையில் உள்ள ஏர் கம்ப்ரசர் வெடித்ததில், பலத்த காயமடைந்த 4 பேர், ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பஞ்சர் கடையில் உள்ள ஏர் கம்ப்ரசர் வெடித்ததில் பலத்த காயமடைந்த 4 பேர், ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் லதிப் (வயது 38) என்ற மாற்றுத்திறனாளி சொந்தமாகப் பஞ்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இக்கடையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று, லதிப் கடையில் காற்று பிடிக்க வந்ததாகக் கூறப்படுகின்றன.
லாரிக்கு காற்று பிடிக்கையில் ஏர் கம்ப்ரசர் பலத்த சத்தத்துடன் வெடித்து, அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு, கடையின் மேற்கூரை பறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், லாரி டிரைவர்கள் லிங்கப்பா, முத்து, பஞ்சர் கடை உரிமையாளர் லதீப், முருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கை, கால்கள் முறிந்த நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லாரி டிரைவர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லதிப், முருகன் ஆகிய இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாகலூர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
