ETV Bharat / state

பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்த கருத்து கேட்புக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர்கள்.. மக்கள் ஆவேசம்

author img

By

Published : Aug 16, 2022, 6:19 PM IST

கிராமமக்கள் ஆவேசம்
கிராமமக்கள் ஆவேசம்

பரந்தூர் புதிய விமானநிலையம் அமைப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்திற்கு வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த கிராமத்தினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதியதாக சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் வராததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய மாநில அரசுகளால் வாலாஜாபாத் ஒன்றியம் பரந்தூரில் சென்னையில் 2ஆவது புதிய சர்வதேச விமானநிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் உட்பட 12 கிராமங்களின் விவசாய விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தினரும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.

பரந்தூர் விமானநிலையம் வேண்டாம்-கிராமசபை தீர்மானம்: அந்த வகையில், சுதந்திர தினமான நேற்று (ஆக.15) புதிய விமானநிலையம் அமைக்க எதிர்ப்புத்தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்தொடர்ச்சியாக, அப்பகுதியிலுள்ள நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டுபரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை எடுக்கக்கூடாது என கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம் நடக்காமலே சத்தமின்றி அகற்றப்பட்ட பேனர்
கருத்து கேட்புக் கூட்டம் நடக்காமலேயே சத்தமின்றி அகற்றப்பட்ட பேனர்

கருத்து கேட்புக் கூட்டம்; சரியான நேரத்தில் பங்கேற்காத அமைச்சர்கள்: இந்நிலையில் இன்று (ஆக.16) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 'புதிதாக சர்வதேச விமானநிலையம் அமைப்பது குறித்து பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்' நடந்தது. முன்னதாக, காலை 10 மணியளவில் இக்கூட்டம் நடக்கும் எனத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உட்பட அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ. வேலு ஆகியோர் கலந்துகொள்வர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

இக்கூட்டத்தில் சம்பந்தபட்ட 12 கிராமங்களிலும் இருந்து கிராமத்திற்கு 5 பேருக்கு மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்படியே கிராமத்தினர் பங்கேற்று இருந்தனர். காலை முதலே, காத்திருந்த கிராம மக்கள் மதியம் 12 மணிவரை ஆகியும் அமைச்சர்கள், ஆட்சியர் என யாரும் வராததால் அலுவலர்களிடம் கேள்விகள் எழுப்பினர்.

12 கிராமத்தினர் வெளிநடப்பு
12 கிராமத்தினர் வெளிநடப்பு

கிராமமக்கள் ஆவேசம்: இதனால், கருத்து கேட்புக் கூட்டத்திற்காக கூட்டரங்கில் வைக்கப்பட்ட பேனரும் திடீரென அகற்றப்பட்டு வெளியே எடுத்துச்சென்றதாலும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்படைந்தனர். இதனைத்தொடர்ந்து கூட்டரங்கில் இருந்த அரசு அலுவலர்கள், காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் ஆவேசம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் ஆவேசம்

"புதிய விமானநிலையம் வேண்டாம்" என முழக்கம்: கிராம மக்களை கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வருமாறு உடனடியாக வர வைத்துவிட்டு, கூட்டரங்கில் இருந்து கருத்து கேட்புக் கூட்டம் குறித்த பேனரை சத்தமில்லாமல் அகற்றியதைக் கண்ட கிராமத்தினர் ஆத்திரமடைந்து "வேண்டாம்..வேண்டாம்.. புதிய விமானநிலையம் வேண்டாம்" என முழக்கங்களை எழுப்பியபடி, வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினர் வெளிநடப்பு செய்த கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எவ்விர சமரசமும் அடையாதவர்கள், 'நாங்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்' என அறிவித்தனர்.

மேலும் குறிப்பாக, பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைப்பது குறித்து சம்பந்தபட்டப் பகுதிகளில் கிராமம் வாரியாக சென்று கருத்துகேட்பு நடத்தவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு கருத்து கேட்புக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் வராததைக் கண்டித்து ஆவேசமடைந்த கிராம மக்கள் கூட்டமாக வெளிநடப்பு செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்தில் அமைச்சர்கள் வந்தனர். அதன்பின் நடந்த சமாதானப்பேச்சுவார்த்தைக்குப்பின், கருத்து கேட்புக்கூட்டத்தில் கிராமமக்கள் பங்கேற்றனர்.

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

இதையும் படிங்க: 'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.