ETV Bharat / state

356 வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க முயற்சி ? - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 28, 2022, 10:09 AM IST

காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி
காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழ்நாட்டில் 356 வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பாஜக திட்டமிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , “கோவையை பதற்றமான இடமாக மாற்றி விடக்கூடாது.

கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக விரும்பவில்லை என தெரிகிறது. செப்டம்பர் 26 கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேணடும். மாநில முதலமைச்சரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார்.

தமிழ்நாடு காவல்துறையை மிரட்டுகிறார். பேட்டை ரவுடியைப் போல அண்ணாமலை பேசுகிறார். 356 பிரிவை பிரகடனப்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர திட்டமிடுகின்றனர். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரீகம் இல்லாத வகையில் அவர் பேசுகிறார். இந்த மாதிரி பேச்சை அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு இதுபோல பேசுபவர்களை நடமாட அனுமதிக்க கூடாது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை.

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்கள் வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை?

காந்தியை கொன்றதை கொண்டாடியவர்களுக்கு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கின்றனர். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது.

பயங்கரவாத அமைப்பின் பின்னால் நீதிமன்றம் செல்வது வேதனையானது. சவுக்கு சங்கர் என்பவரின் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும், நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது.

சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி நடத்த இருக்கின்றோம். மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கண்களை உறுத்துகின்றது. ஆன்லைன் ரம்மி சட்டத்தினை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர்.

இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இவற்றை மூடி மறைக்க பாஜகவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர். பொதுமக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இவற்றை எதிர்த்து பிரம்மாண்டமான போராட்டடம் நடத்த வேண்டி இருக்கின்றது.

பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயல்கின்றனர். மாநிலங்களுக்கு இடையே இந்தி மொழியில் கடித போக்குவரத்து இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இந்தி மொழியில் கடித போக்குவரத்து இருக்க வேண்டும்.

இந்தியாவின் பெயரை ஹிந்தியா என மாற்ற பார்க்கின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை அலுவலர்களை எச்சரிப்பது, நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அவர் சாதாரண அரசியல்வாதி இல்லை. ஐபிஎஸ் படித்து விட்டு வந்திருக்கும் நிலையில், வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே இப்படி பேசுகின்றார்.

மாநில அரசை, முதலமைச்சரை, காவல்துறையை மிரட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும்? அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு வன்முறை வெறியை வெளிப்படுத்தும் விதமான பேச்சாக இருக்கின்றது. நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது.

ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். அவர் வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதை சொன்னார். இதற்கு வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோபம் இருக்க வேண்டும்.

ஆனால் அதை எடுத்துச் சொன்னவர் மீது கோபம் அடைய கூடாது. இறை நம்பிக்கை இருக்கின்றவர்களையும் மனுதர்மம் சூத்திரன் என்றுதான் சொல்கின்றது. ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை.

ஆ.ராசாவை மட்டும் குறிவைத்து பாஜக விமர்சிப்பது சாதிய கண்ணோட்டம் என்றுதான் பார்க்கத் தோன்றுகின்றது. இதை வைத்து பாஜக அரசியல் நாடகம் ஆடுகின்றது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் - ஆ.ராசா பேச்சு குறித்து ஜெயக்குமார் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.