ETV Bharat / state

கோவையில் திமுகவின் வளர்ச்சிக்கு கை கொடுத்துள்ளதா செந்தில் பாலாஜியின் வருகை

author img

By

Published : Dec 30, 2022, 5:54 PM IST

Updated : Dec 30, 2022, 7:04 PM IST

Etv Bharatதிமுகவின் வளர்ச்சிக்கு கை கொடுத்துள்ளதா அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள்?
Etv Bharatதிமுகவின் வளர்ச்சிக்கு கை கொடுத்துள்ளதா அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள்?

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் திமுகவின் வளர்ச்சிக்கு கை கொடுத்துள்ளதா என்பது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை காணலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகையும் கோவையும்...

கோவை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 140 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என நிரூபித்தது. இதற்கு காரணம் திமுகவில் நிலவிய கோஷ்டி பூசல் மற்றும் அதிமுகவினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டதால் திமுக தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கோவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் மாவட்டத்திற்கு என அமைச்சர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்கவும், கரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் பொறுப்பு அமைச்சர்களாகப் நியமிக்கப்பட்ட ராமசந்திரன், சக்கரபாணி மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அசைக்க முடியாத இடத்தில் இருந்ததால், கோவைக்கு தனிக்கவனம் செலுத்த முடிந்தது. அதே மாதிரியான நபர் இருந்தால்தான் கோவையில் திமுக வெற்றி பெற முடியும். அதற்கு செந்தில் பாலாஜி மாதிரியான ஆளுமைமிக்க நபர்களால் மட்டுமே வேலுமணியையும் எதிர்த்து அரசியல் செய்து, கட்சியை வளர்க்க முடியும் என நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.

இதனை தொடர்ந்து அவரின் வருகை கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது. எதை எடுத்தாலும் பிரம்மாண்டம், தோல்வியே இல்லை என்ற நிலையை செந்தில்பாலாஜி ஏற்படுத்தினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் வந்து இணைய ஆரம்பித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வைத்து பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தி கோவையை திக்குமுக்காட வைத்தார் செந்தில்பாலாஜி.

அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் அவர் மேற்கொண்ட அனைத்து யுக்திகளும் வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்திலும் திமுக கைப்பற்றியது. இரண்டு பேரூராட்சிகள் மட்டுமே திமுகவை கைவிட்டது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவினர் கதாநாயகனாகவே பார்த்தனர். அதே சமயம் அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் இருந்து கோவை வந்துள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை உள்ளூர் திமுகவினருக்கு தரப்படவில்லை என்ற அதிருப்தியில் திமுகவினர் உள்ளனர்.

செந்தில் பாலாஜி வருகைக்கு முன்பு, ஒவ்வொரு டாஸ்மாக் மூலமாக மாதம் சுமார் 50,000 வந்து கொண்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் அதை அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு, அந்தப் பணம் கரூர் கட்சிகாரர்களுக்கு தான் செல்கிறது என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை நிர்வாகிகளிடம் எதுவுமே அவர் பேசுவதில்லை. நாங்கள் கொடுக்கும் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் பார்கள் செந்தில் பாலாஜியின் கரூர் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஒரு நிகழ்ச்சி நடந்தால், மைக் செட் முதல் பணம் கொடுப்பது வரை எல்லாமே கரூர்காரர்கள் தான் செய்கின்றனர். கட்சிக்காக காலம் காலமாக உழைத்த எங்களை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கோவை மாவட்ட திமுகவில் ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்த நிலையில், அதை மூன்றாக மாற்றியுள்ளார் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் அடங்கியது. கோவை மாநகர் மாவட்டமாகவும், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகள் அடங்கியது கோவை வடக்கு மாவட்டமாகவும், சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகள் அடங்கியது கோவை தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் அதையும் மனதில் வைத்துத்தான் தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார் என திமுக மேலிடம் நம்புகிறது.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கோவை மாவட்டத்திற்கு அதிகப்படியான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதலமைச்சர் கூறியுள்ளது போல் திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கும் அளவிற்கு கோவை மாவட்டத்திற்கு அதிகப்படியான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கோவை என்றுமே முதலமைச்சரின் அன்புக்குரிய இடமாக உள்ளது என தெரிவித்தார்.

கோவை மாவட்ட திமுகவில் உள்கட்சி மோதல், நிர்வாக ரீதியான பிரச்சனைகள், எதிர்க்கட்சிகளுடன் மறைமுக கூட்டணி, திறமையானவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் என பல்வேறு காரணங்களை கடந்த கால தேர்தல் தோல்விகளுக்கு உதாரணமாக கூற முடியும். அதேசமயம் திமுக கட்சி வளர்ச்சியில் கோவை மாவட்டத்தின் பங்கு தவிர்க்க முடியாததாகும். பல்வேறு ஆளுமைகளை இந்த மாவட்டம் இதுவரை உருவாக்கியது.

எனவே அடுத்த கட்டமாக தகுதியான ஒரு நபரை மாவட்டத்திற்கான பொறுப்பாளராக நியமிக்க வேண்டிய கடமை கட்சித் தலைமைக்கு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்பாளராக நியமனம் செய்தது, துவண்டு கிடந்த கட்சி தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான தற்காலிக முயற்சி மட்டுமே. சொந்த மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படும் தலைமைகள் மட்டுமே அந்தந்த மாவட்ட தொண்டர்களை அரவணைத்து கொண்டு செல்ல முடியும்.

எனவே மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கோவை மாவட்டத்திற்கான கட்சி தலைமையையும் கண்டறிய வேண்டிய பொறுப்பை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுக கட்சி தலைமை வழங்க வேண்டும். அதுவே அந்தக் கட்சியை தேர்தலை கடந்து வலிமையான அரசியல் கட்சியாக நிலை நிறுத்தும்.

இதையும் படிங்க: நொய்யல் நதியை மீட்டெடுக்க ‘நொய்யல் பெருவிழா’

Last Updated :Dec 30, 2022, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.