ETV Bharat / state

நொய்யல் நதியை மீட்டெடுக்க ‘நொய்யல் பெருவிழா’

author img

By

Published : Dec 30, 2022, 8:15 AM IST

நொய்யல் நதியில் கழிவுகள் கலக்காத வகையில் தூய்மையான நதியாக மீட்டெடுக்க நொய்யல் பெருவிழா நடத்தப்படவுள்ளது

நொய்யல் நதியை மீட்டெடுக்க கொண்டாடப்படும் ‘நொய்யல் பெருவிழா’
நொய்யல் நதியை மீட்டெடுக்க கொண்டாடப்படும் ‘நொய்யல் பெருவிழா’

நொய்யல் நதியை மீட்டெடுக்க கொண்டாடப்படும் ‘நொய்யல் பெருவிழா’

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான சிறுவாணியில் உருவாகும் காஞ்சிமாநதி என்றழைக்கபடும் நொய்யல் ஆறு 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக வளமோடு காணப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், 70-க்கும் மேற்பட்ட குளங்கள், 120-க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன. அத்தகைய பல்வேறு சிறப்பை கொண்ட நொய்யல் நதி கழிவுநீரால் மாசுபட்டு காணப்படுகிறது. அதற்காக பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் நொய்யலின் புனிதத்தை போற்றும் வகையில் நொய்யல் பெருவிழா நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து பேரூர் மருதாசல அடிகளார் நேற்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறுகையில், "அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நொய்யல் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நொய்யல் பெருவிழா நடத்தப்படுகிறது. நொய்யல் பெருவிழா ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அகில இந்திய சந்நியாசிகள் சங்கம் பல்வேறு நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது நதிகளை பாதுகாப்பது. அதன்படி காவிரி உற்பத்தியாகக்கூடிய குடகு பகுதியில் இருந்து கடலில் கலக்கும் காவிரிபூம்பட்டினம் வரை காவிரி அன்னை சிலை எடுத்து செல்லப்பட்டு ஆராத்தி விழா நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்ற நதிகளுக்கும் புஷ்கரணி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வைகை, தென்பெண்ணை, பாலாறு ஆகிய நதிகளுக்கும் புஷ்கரணி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நொய்யல் ஆற்றுக்கும் பெருவிழா எடுக்கப்படுகிறது. இந்த நொய்யல் பெருவிழாவில் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியுடன் கலக்கும் வரை உள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நொய்யல் அன்னை சிலை பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆராத்தி விழா நடத்தப்படும். இந்த நொய்யல் பெருவிழாவை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாரத்தான், விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடத்தப்படவுள்ளது.

மேலும், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நொய்யல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. 7 நாள்கள் நடைபெறும் நொய்யல் பெருவிழாவில் இந்திய அளவிலுள்ள சந்நியாசிகள், பெண் துறவிகள், சித்தர்கள், கோயில் பூசாரிகள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்கள், பல்வேறு தத்துவ நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

மேலும் 7 நாள்களுக்கு 7 இடங்களில் நொய்யல் ஆற்றுக்கு ஆராத்தி விழா நடத்தப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தற்போது பெளர்ணமி தினத்தில் ஆராத்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து நூலில் நொய்யல் நதி போற்றப்பட்டுள்ளதை போல் நொய்யல் நதியை அனைவரும் இணைந்து தூய்மையானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுவோம். குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி நதி நொய்யலை போன்று கழிவுகளால் பாழ்பட்டிருந்தது.

அதனை அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி தூய்மைப்படுத்தினார். அதேபோல் நொய்யல் நதியையும் கழிவுகள் கலக்காத வகையில் தூய்மையான நதியாக மீட்டெடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு வலியுறுத்தப்படும்.

நொய்யல் பெருவிழாவோடு பல்வேறு அமைப்புகள் இணைந்து நொய்யலை மீட்டெடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது சிறுதுளி நிறுவனர் வனிதா மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தை சேர்ந்த சுவாமி வேதாந்தானந்தா, சுவாமி அஜித் சைதன்யா, சுவாமி ராமானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு வழக்கு: மேலும் இருவர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.