ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் மக்கள் எரிமலை வெடிக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை

author img

By

Published : May 13, 2019, 10:16 PM IST

k. veeramani

சென்னை: மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணித்தால் மக்கள் எரிமலை வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது. ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி அதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதுபோன்று நிலையான எதிர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடுப்பாரா என அறிக்கையில் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், இயற்கையை வேட்டையாடும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு ஏன் துடிக்கிறது? இதன் பின்னணி என்ன? கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கவா? என அடுக்கடுக்கானக் கேள்விகளையும் வீரமணி அறிக்கையில் எழுப்பத் தவறவில்லை.

மேலும், வேளாண் நிலங்களையும், நீரையும் நாசப்படுத்தி கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்க வேண்டாம் என்று பாஜகவை எச்சரித்த அவர், மீறி செயல்படுத்தினால், மக்கள் எரிமலையாகிச் சீறி எழுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  மத்திய அரசு கைவிடாவிட்டால் மக்கள் எரிமலை வெடிக்கும் என திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.
புதுச்சேரி முதல்வரின் கருத்து
‘‘தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரி பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொடுத்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இரண்டாண்டுகளுக்குமுன் திருநள்ளாறு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுக்க இருப்பதாக மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்தது.
சிறிதும் தாமதிக்காமல் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். சட்டப்பேரவையிலும் அதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளேன்.
இந்த நிலையில், மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் அத்திட்டத்தைக் கொண்டுவர இருப்பதாகக் கூறுவது சரியல்ல. இரண்டாண்டுகளுக்கு முன் சொன்னதையே மத்திய அரசுக்குத் திரும்பவும் சொல்ல விரும்புகிறோம். மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எங்களுக்கு வந்தால், அதனைத் திருப்பி அனுப்பி, இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று நான் பதில் அளிப்பேன்’’ என்று திட்டவட்டமாக புதுச்சேரி மாநில அரசின் நிலைப்பாட்டை அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
திட்டவட்டமான எதிர்ப்பு வரவேற்கத்தக்கதே!
எதிலும் வழவழா குழகுழா என்று குழப்பாமல் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மத்திய அரசுக்கு உறுதியான குரலில் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதை தமிழ்நாடு முதலமைச்சரும் பின்பற்றிட வேண்டாமா?
வேளாண் நிலங்களை வேட்டையாடுவதா?
வேளாண் நிலத்தில் இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்கான ஆய்வை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகப்பெரிய அளவில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்தை மத்திய அரசு ஏன் புறக்கணிக்க வேண்டும்?
வெளிநாடுகளிலும் எதிர்ப்பு! 
இந்தத் திட்டத்திற்கு வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியதுண்டு.
அமெரிக்காவின் மிஸிஸிபி மற்றும் மிஸ்ஸோரி நீர்ப்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்கவாழ் குடிமக்கள் - அங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்று அங்கு வாழும் பழங்குடியின மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நீரையும் மாசுபடுத்தும்
இத்திட்டம் வேளாண் நிலங்களை மட்டுமல்ல, நீரையும் பாதிக்கச் செய்யும். அங்கு ஓடும் முக்கிய நதிகளின் நீரும் மாசுபடும் என்றும் எச்சரித்துக் குமுறி எழுந்தனர்.
அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும், அய்ரோப்பாவில் பல நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இயற்கையை வேட்டையாடும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய பி.ஜே.பி. அரசு ஏன் துடிக்கிறது? இதன் பின்னணி என்ன?
கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கவா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் அதே வேதாந்தா நிறுவனத்துக்குத்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு தாராளமாக தந்துள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
மக்களைப்பற்றி கவலைப்படாது - அதேநேரத்தில் கார்ப்பரேட்டுகளுக்காகவே ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. அரசு இப்படி நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை.
மக்கள் எரிமலை வெடிக்கும் - எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உள்பட 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டில்லியில் அத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையொப்பமிட இருப்பதாகத் தகவல்.
வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்; வேளாண் நிலங்களை - நீரை நாசப்படுத்தி கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
மீறி செயல்படுத்தினால், மக்கள் எரிமலையாகிச் சீறி எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
ஆட்சியின் கடைசிக் காலத்தில்கூட மக்களுக்கு நல்லது செய்யக்கூடாது என்று பி.ஜே.பி. அரசு முடிவுக்கு வந்துவிட்டதோ! 
‘‘வினாசகாலே விபரீத புத்தி!’’ - பந்தயம் கட்டி, கெட்டுப் போகத் துடிக்காதீர்!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.