ETV Bharat / state

'பாஜகவின் வலையில் சிக்காதது விடுதலைச் சிறுத்தைகள்தான்' - தொல்.திருமாவளவன்

author img

By

Published : Sep 28, 2021, 6:49 PM IST

'பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது விடுதலை சிறுத்தைகள் தான்'
'பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது விடுதலை சிறுத்தைகள் தான்'

பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது இந்தியாவிலேயே விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு 'சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை' என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது மதச்சார்பற்ற கட்சி. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் போராடி வருபவர் திருமாவளவன். பெண்கள் ஓட்டு மட்டுமே போடுபவர்களாக இருந்தவர்கள். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான்" என்றார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், "ஒருநாளும் திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகக் கூடாது. தன் மக்களுக்காகக் களத்தில் நிற்கிறார் திருமாவளவன். அவர் கண் அசைந்தால் எங்கேயோ கொண்டு போக சிலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொள்கைப் பிடிப்போடு அவர் உறுதியாய் நிற்கிறார்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு. கொள்கை அடிப்படையில் நண்பர்களையும் எதிரிகளையும் பிரித்துப் பார்ப்பவர்கள் நாங்கள். நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்தான் எங்கள் எதிரி. இது ஒரு தத்துவ போர், இந்த போரில் வெற்றி பெறப்போவது நாம் தான். சிலர் கத்தி கத்தி ஆவேசமாகப் பேசுகிறார்கள். கத்தி பேசுவதால் எந்த பயனும் இல்லை. இந்த சமூக மாற்றத்திற்காக திருமாவளவனும் நாங்களும் இணைந்து பயணிக்கிறோம்" என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியத்தின் ஒரே இலக்கு சமத்துவம். அகில இந்திய அளவில் சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை உள்ளிட்ட ஐவகை கொள்கைகளைக் கொண்ட ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் சனாதனத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். பாஜக என்பது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் அரசியல் பிரிவு குழந்தை.

'பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது விடுதலை சிறுத்தைகள் தான்'

திருமாவளவன்தான் எதிரி என்று சில பேர் பேசி வருகிறார்கள். திருமாவளவன் எதிர்ப்பு என்ற எல்லைக்குள் அவர்கள் அடைபட்டுக் கிடக்கட்டும். நாம் சமத்துவத்தை நோக்கிப் பயணிப்போம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது தான் விடுதலை சிறுத்தைகளிள் கொள்கை.

இந்த சமூக நீதியை அழித்தொழிக்க கங்கணம் கட்டி திரிகிறார்கள். சனாதன வாதிகள், எஸ்சி, ஓபிசி என்ற பெயரில் தனித் தனியாக இணைந்தால் மதவாதிகள் நம்மை பிளவுபடுத்தி விடுவார்கள். சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற புள்ளியில் நாம் ஒன்றுபட வேண்டும். பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது இந்தியாவிலேயே விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்" என்றார்.

இதையும் படிங்க: களைகளாக மாறும் இளந்தளிர்கள் - ராமதாஸ் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.