ETV Bharat / state

மோடியை பெரியாராக காட்டுவது தமிழகத்தில் நடக்காது - திருமாவளவன் பேட்டி

author img

By

Published : Sep 17, 2022, 5:14 PM IST

Updated : Sep 17, 2022, 6:30 PM IST

Etv Bharat
Etv Bharat

மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்; இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் எனவும் தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள், பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுவது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'மோடியை, பெரியார் என்று காட்ட நினைப்பது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் எனவும் தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது' எனவும் தெரிவித்துள்ளார்.

மோடியை பெரியார் என்று காட்ட நினைப்பது; வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் - திருமாவளவன்

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், " வருகிற செப்.28 மதுரையிலும் அக்.8 கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க 'சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்' என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதை ஒரு கருத்தியல் பரப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கிறோம் என்றார்.

நாடெங்கும் சனதான சக்திகளை தனிமைப்படுத்துக: இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை பெரியார் பிறந்த நாளான இன்று, சமூக நீதி நாளான இன்று, ஒரு அழைப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுக்கிறது.

பிஞ்சு குழந்தைகளிடமும் தீண்டாமை: தென்காசி அருகே சங்கரன்கோவில் பக்கத்தில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்க சென்றபோது, அவர்களை இழிவு படுத்தும் வகையில் அவர்களின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையில் காயப்படுத்தும் வகையில் உங்கள் ஊரைச் சார்ந்தவர்களுக்கு பொருள் எதுவும் தர மாட்டோம். கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லுகிற வீடியோ காட்சி பரவி வருகிறது. காவல்துறை வழக்குப்பதிவு செய்தது என்றாலும் கூட அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

வன்கொடுமையை தமிழக அரசு தடுக்கக் கோரிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 8 பட்டியல் இனத்தவர்களை பல்வேறு காரணங்களை சொல்லி கொடூரமாக சாதியின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலே, பெண்மணி சத்யா என்பவரும் கொல்லப்பட்டிருக்கிறார். அப்பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அண்மையிலே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம்.

முதலமைச்சருக்கு விசிக நன்றி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடக்கு மலைக்கிராமத்தில் மக்கள் கோவிலில் நுழைவதற்கு உரிமை கேட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள், கோவிலில் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதற்காக முதலமைச்சருக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார்-மோடி ஒப்பீடு? ஜம்பம் பலிக்காது: தமிழ்நாட்டை அவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள். குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துகிறார்கள், பெரியாருக்கு காவியைப் பூச முயற்சிக்கிறார்கள். அதேபோல, இன்றைக்கு மோடியை பெரியார் என்று காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள், இவையெல்லாம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகும் தான் இருக்குமே தவிர தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது. தமிழ் மண்ணில் இருந்து அவர்கள் விரட்டப்படுவார்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: "ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்

Last Updated :Sep 17, 2022, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.