ETV Bharat / state

கேரளாவில் குரங்கம்மை பரவல்: மாநில எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 15, 2022, 8:58 PM IST

Updated : Jul 15, 2022, 10:40 PM IST

எல்லைகளில் குரங்கம்மை தொற்று தீவிர கண்காணிப்பில் உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!
எல்லைகளில் குரங்கம்மை தொற்று தீவிர கண்காணிப்பில் உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!

கேரளாவில் குரங்கம்மை பரவல் காரணமாக மாநில எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: எழும்பூரில் உள்ள அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில், 18 வயது முதல் 59 வயதிற்குட்பட்டோருக்கு அரசு கரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) வழங்கும் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், “கரோனா பேரிடரின் பாதிப்பிற்கு தீர்வாக இந்தியா முழுமைக்கும் 2021 ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதன்முதலில், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி என்றும், பிறகு 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி என்றும் தொடங்கப்பட்டது.

பிறகு படிப்படியாக 45 வயதை தாண்டியவர்களுக்கான தடுப்பூசி, 18 வயதை தாண்டியவர்களுக்கான தடுப்பூசி, கர்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி, பாலுட்டும் தாய்மார்களுக்கான தடுப்பூசி, மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி, 15 வயது முதல் 17 வயதினருக்கான தடுப்பூசி, 12 வயது முதல் 14 வயதினருக்கான தடுப்பூசி என பல கட்டங்களாக தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசின் தடுப்பூசி போடும் திட்டத்தினை நேரடியாக தொடங்கி வைத்து, தடுப்பூசி போடும் பணிகளை ஒரு இயக்கமாக மாற்றினார். தமிழ்நாட்டில் இதுவரை 31 மெகா கரோனா தடுப்பூசி முகாமினால் 4,61,75,586 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேல் முதல் தவணை 95.27 சதவீதமும், இரண்டாம் தவணை 87.35 சதவீதம் பேர் போட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் கரோனா மையங்களில் ஜூலை 14 ஆம் தேதி வரை 11,63,18,727 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 18,28,821 டோஸ்கள் முன்னெச்சரிக்கை தவணையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் கால அளவு 9 மாதத்திலிருந்து 6 மாதம் என குறைக்கப்பட்டுள்ளது. அரசு கரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை அளித்து வருகிறது.

இதுவரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி வழங்கப்பட்டு வந்தது. இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தடுப்பூசி செலுத்தும் சதவீதமும் குறைவாகவே இருந்தது. எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை இலவசமாக அரசு கரோனா தடுப்பூசி மையத்திலேயே போட அனுமதிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

75 வது ஆண்டு பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்பூசி “Amrit Mahotsava” முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொள்ள ஜூலை 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் 75 நாட்களுக்கு “Jan Abhiyaan” திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அரசு கரோனா மையங்களில் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

38 மாவட்டங்களிலுள்ள 2,590 அரசு கரோனா தடுப்பூசி மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இரண்டு தவணைகள் பெற்று கொண்ட கரோனா தடுப்பூசியே முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்தப்படும். சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் CoWIN இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பு தடுப்பூசி முகாம்கள், சுற்றுலா தலங்கள், மேளா மற்றும் சபைகள் உள்ள இடங்களில் நடத்தப்படும்.

கேரளாவிற்கு அரபு நாட்டில் இருந்து வந்த ஒரு பயணிக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கேரளா தமிழ்நாடு எல்லையிருக்கின்ற 13 இடங்களிலும் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுகள், அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. பன்னாட்டு விமான நிலையங்களில் இந்த நோய் தொடர்பாக கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 15 வயது சிறுமியிடம் இருந்து சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கருமுட்டை தொடர்பான சம்பவத்தில் நேற்றைக்கு 2 இடங்களில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டது. 4 மருத்துவமனைக்கு 15 நாட்களுக்குள் முடுவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை படிப்படியாக டிஸ்சார்ஜ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரங்கம்மை வைரஸ் பரவல்... தெரிந்துகொள்ள வேண்டியவை....!

Last Updated :Jul 15, 2022, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.