ETV Bharat / bharat

குரங்கம்மை வைரஸ் பரவல்... தெரிந்துகொள்ள வேண்டியவை....!

author img

By

Published : Jul 15, 2022, 5:05 PM IST

இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

monkeypox
monkeypox

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 35 வயதான நபருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மையின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

குரங்கம்மை என்றால் என்ன : குரங்கம்மை என்பது வைரசிலிருந்து பரவும் அம்மை நோய். சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய், பிற்காலத்தில் மனிதர்களுக்கு பரவியது. அதனால், இது குரங்கம்மை என்று அழைக்கப்படுகிறது. குரங்கம்மை நோய் முதன் முதலில் 1958ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் 1970ஆம் ஆண்டு மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. காங்கோ குடியரசில் 9 வயதான சிறுவனுக்கு முதன்முதலில் குரங்கம்மை ஏற்பட்டது. பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய இந்த நோய், தற்போது ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.

எப்படி பரவுகிறது : குரங்கம்மை ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. முதலில் எலிகள், குரங்குகள், அணில்கள் உள்ளிட்டவற்றில் குரங்கம்மை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. வனப்பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு பரவியது. உமிழ்நீர், தும்மல், இருமல், காயம் உள்ளிட்டவற்றின் மூலம் குரங்கம்மை வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. சின்னம்மை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு குரங்கம்மை எளிதில் பரவும் ஆபத்து உள்ளது.

அறிகுறிகள் : வழக்கமாக குரங்கம்மை வைரஸ் தாக்கிய 6 முதல் 13 நாட்களில் அறிகுறிகள் தென்படும். சிலநேரம் அறிகுறிகள் தென்பட 21 நாட்கள் வரை ஆகலாம். இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கக்கூடும். காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, சோர்வு உள்ளிட்டவை குரங்கம்மையின் அறிகுறிகள். 13 நாட்களுக்குப் பிறகு, முகம், கைகள், கால்கள் என உடல் முழுவதும் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குரங்கம்மை நோய் தாக்குதலில் உயிரிழப்பு குறைவு. குரங்கம்மையின் பாதிப்புகள் ஒருவரின் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, இணை நோய்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து மாறுபடலாம்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் : குரங்கம்மைக்கு இதுவரை தனிப்பட்ட சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. குரங்கம்மையின் பாதிப்பை குறைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், மோசமான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். குரங்கம்மைக்கு தடுப்பூசி உள்ளது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் இறந்துபோன விலங்குகளை உரிய பாதுகாப்பு இன்றி நேரடியாக தொடக்கூடாது - இறைச்சிகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை தொடுவதை தவிர்க்கலாம் - அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் - குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களை தொடுவது, நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்கலாம் - கரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகளை குரங்கம்மை வைரஸ் பரவலுக்கும் பின்பற்றலாம்.

இதையும் படிங்க:குரங்கு கூட்டங்களுக்கு இடையே சண்டை- வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.