ETV Bharat / state

"யார் ஆட்சியில் ஊழல் அதிகம்" - ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!

author img

By

Published : Jun 12, 2023, 4:48 PM IST

chennai airport
கோப்புபடம்

இந்தியாவின் மிகமோசமான ஊழல் வரலாறு என்பது 2004 முதல் 2009 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூரு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் கூறியதை நான் தெரிவிக்கிறேன். நாங்களாகவே தகுதி பட்டியல்(merit list) ஒன்றை உருவாக்கி, யாருக்கெல்லாம் நூறு சதவீதம் சீட் கிடைக்குமோ அவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வழங்கிய பின்னர், அரசு கல்லூரியில் மீதமுள்ள சீட்டை விற்று விடுவோம் என முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். நான் பொய்யான தகவலை தெரிவிக்கவில்லை இது பொய் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2006 இல் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஏன் தனியார் மருத்துவக்கல்லூரிகள் அதிகமானது. நீட் வருவதற்கு முன்பு மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் சூதாட்டம், ஊழல் நடந்தது. கருணாநிதியே இதை ஒப்புக்கொண்டதாக ஆற்காடு வீராசாமி அன்று தெரிவித்தார். ஏழைத்தாயின் மகனும், விவசாயின் மகனும் மருத்துவராக வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நீட் கொண்டுவரப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளோடு ஒப்பந்தம் செய்து பணம் சம்பாதித்தார்கள் என கடுமையாக விமர்சித்தார்.

இந்த பிரச்னைகள் நீட் வந்த பிறகு அது குறைந்துள்ளது. தற்போது மத்திய கலந்தாய்வும் இந்த பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்கும். சாமானிய மக்கள் கூட மருத்துவ படிப்பு பெறுவதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த முயற்சி பலனளிக்கும். 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுச்சேரியும் சேர்த்து 40 இடங்களை கைப்பற்றுவோம். யாருக்கு எவ்வளவு சீட் ஒதுக்கப் போகிறோம் என்பது அப்போது முடிவு செய்வோம் என்றார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு அதிமுகவின் ஜெயக்குமார், செம்மலை போன்றோர் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துள்ளோம் என்றால் அதற்கு பாஜக தான் காரணம். ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மடங்கு மருத்துவ சீட் அதிகப்படுத்தியுள்ளோம். மாலை இந்த புள்ளி விவரங்களை வெளியிடுகிறேன். மருத்துவத் துறையில் சாதனைகள் செய்துள்ளோம். 262 கோடி கரோனா தடுப்பூசி போட்டு உள்ளோம் என்று கூறினார்.

மேலும், ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என அமித்ஷா கூறியுள்ளார். ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக தலைவராக வில்லையா? 1982ல் அமித்ஷா பூத் தலைவராக இருந்தார். பாஜகவில் மட்டும் தான் ஒரு சாதாரண தொண்டனும் கூட எந்த உயரத்திற்கும் செல்ல முடியும். முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக அவசரப்பட்டு கொண்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு மாற்றாக கனிமொழி வந்து கொண்டிருக்கிறார். திமுகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவருக்கு ஸ்டாலின் மீது அதிருப்தி உள்ளது. எனவே கனிமொழி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

3ஜி என்பது மூன்று தலைமுறை குடும்பம் என்பதை அமித் ஷா நேற்று குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், கோபாலபுரத்தில் பிறக்காத ஒருவர் உங்கள் கட்சியில் பெரியளவில் வர முடியுமா..? புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது திமுக தான். அனைத்து மாவட்டங்களிலும் குறுநில மன்னர்களை உருவாக்கியுள்ளனர். இதற்காக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

அதோடு, கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்தால் ஸ்டாலினால் முதல்வராக இருந்திருக்க முடியுமா?. பாஜகவில் நிலைமை அப்படி இல்லை. கருணாநிதி மகன் என்பதை விட ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. கருணாநிதி எனும் அலை பெயரை பயன்படுத்தி வருகிறார். திமுகவின் அஸ்திவாரம் மிகவும் உறுதியாக உள்ளது யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஒரு கிளைத் தலைவர் கூட சேப்பாக்கத்தில் வெற்றி பெறுவார். எனில் ஸ்டாலினுக்கு அரசியலையே தெரியவில்லை. முதல்வர் கேட்ட கேள்விக்கு அமித்ஷா நேற்று பதிலளித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை நாட்டில் மிகப்பெரிய ஊழல் அமைச்சர்கள் யார் என்றால் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் தான். திமுக அமைச்சர்கள் அதிக அளவில் ஊழல் செய்ததால் அவர்களை 2009 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சரவையில் மன்மோகன் சிங் சேர்த்துக் கொள்ளவில்லை.

இந்தியாவின் மோசமான ஊழல் வரலாறு என்பது 2004 முதல் 2009 நடைபெற்ற ஆட்சியில் திமுக அமைச்சர்கள் செய்ததுதான். தற்போது ஒன்பது ஆண்டுகளில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் யாராவது ஒரு குண்டூசியை திருடினார்கள் என சொல்ல முடியுமா. அதனால்தான் திமுகவினருக்கு வயிறு எரிகிறது.. ஏன் பால்வளத் துறை அமைச்சரையும், நிதி அமைச்சரையும் மாற்றினீர்கள் எனக் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:12 ஆண்டுகளுக்குப் பின் சென்னை ஐஐடியில் நேரடிக் கலந்தாலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.