ETV Bharat / state

"காவிரி விவகாரத்தில் பாஜகவினர் தான் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்"- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 10:06 PM IST

காவிரி விவகாரம் குறித்து கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
காவிரி விவகாரம் குறித்து கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

KS Alagiri: காவிரி விவகாரத்தில் பாஜகவினர் பிரச்சனையை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில், இரு மாநிலங்களில் போராட்டங்களும் வலுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "காவிரி பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா மட்டும் நாடகம் ஆடி வருகிறது.

இன்றைய நிலையைப் பொருத்தவரை, காவிரியிலிருந்து நமக்கு எவ்வளவு தண்ணீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொல்வதும், காவேரி ஆணையமும் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மற்றவர்களைக் குறித்து நமக்குக் கவலை இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மிக ராஜதந்திரத்தோடு செயல்பட்டு வருகிறார். நமக்குத் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கைகளில், அவர் தெளிவாகக் கையாளுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உங்கள் கூட்டணி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், நீங்கள் நினைத்தால் தண்ணீர் வந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்துக் கூறுகின்றார். எடியூரப்பாவும் பொம்மையும் அந்த மாநிலத்தில் பெரிய பிரச்சனையை உண்டாக்கினர். அப்போது அண்ணாமலை வாய் திறந்தாரா?.

கர்நாடகத்தில் தண்ணீரைத் திறந்து விடும் போது எல்லாம் பிரச்சனை செய்வது பாரதிய ஜனதா தான். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை. காவிரி ஆணையம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது, அணையின் அளவு கொள் அளவிற்கேற்ப, திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் கூறி இருக்கிறது. கர்நாடக துணை முதலமைச்சர் காவிரி குறித்து எதிர்ப்பு தெரிவித்தாலும், 15 ஆயிரம் கன அடி திறந்து வைத்துள்ளார்கள்.

அதன் பிறகு ஐந்தாயிரம் கன அடி, அதன் பிறகு 4 ஆயிரம் என இன்றைக்கும் திறந்து வைத்திருக்கிறார்கள். துணை முதல்வர் சிவகுமார் அங்குக் காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, நாங்கள் இங்குத் தமிழக காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அப்படி இருக்க எடியூரப்பா, பொம்மை அங்கு எதிர்ப்பு தெரிவித்த போது ஏன் இங்க இருந்து அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகா அரசு சட்டப்படி நமக்குத் தண்ணீர் கொடுப்பார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்குத் தண்ணீர் வருவதை ஏன் தடுக்கின்றீர்கள் எனக் கர்நாடக பாஜகவினரைப் பார்த்து வாய்திறந்து கேட்க முடியாதவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நாம் தமிழர் கட்சியினரை அட்டக்கத்தி என்றுதான் கூறுகிறேன். அனைவரையும் தமிழர் அல்ல என்று கூறி வருகிறார். கச்சத்தீவைக் குறித்துப் பேசுகிறார். வேண்டுமென்றால் கச்சத்தீவைச் சீமான் சென்று மீட்டு வரட்டும். கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு ராஜதந்திரம் இருக்கிறது. அப்போது இந்திரா காந்தி ஆட்சியின் போது, கச்சத் தீவுக்கு மீன் வலையை காய வைத்துக் கொள்வதற்காக ஜனநாயக முறையில் கொடுக்கப்பட்டது.

ஆனால் அதை தேவையில்லாமல் கச்சத் தீவு குறித்து சீமான் பேசி வருகிறார். அதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார் சீமான். இந்தியாவில் ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்காகப் பேசுகிறார். மாநிலங்கள் இடையே ஒரு இன கலவரத்தைத் தூண்டுவதற்குப் பேசி வருகிறார்" நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்மையாக சாடினார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! தடையின்றி கிடைக்கும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.