ETV Bharat / state

"அவர் வருவாரா?" - கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் அஜித்துக்கு அழைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 6:17 PM IST

கலைஞர் 100 விழா குறித்து ஆர் கே செல்வமணி
அஜித்தை அழைப்போம் வருவது அவர் விருப்பம்

Kalaingar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்த் திரைப்படத் துறையினர் பிரம்மாண்டமாக நடத்த உள்ள நிலையில், இந்திய அளவில் உள்ள‌ அனைத்து பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி பிரபலங்களையும் அழைக்க உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி கூறினார்.

சென்னை: தமிழ்த் திரைப்பட துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை ‘கலைஞர் 100’ என்ற பெயரில் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளனர். அடுத்த மாதம் 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கம் சார்பில் லதா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு, சித்ரா லட்சுமணன், டி.சிவா, பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், "டிசம்பர் 24 ஆம் தேதி சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது. ரஜினி, கமல் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பிற மொழியில் உள்ள பிரபலங்களையும் அழைத்துள்ளோம். கருணாநிதியின் படங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லும் விழாவாக இது இருக்கும். அஜித்தையும் இந்த விழாவிற்கு அழைப்போம், வருவதும் வராதததும் அவரது விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை லதா, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார். பின்னர் கே.ராஜன் பேசுகையில், “தமிழ் சினிமாவில் கருணாநிதி காலம் பொற்காலம். அனைவரையும் நேசித்தவர். ஒருவர் (அஜித்) வருவாரா என்று கேட்டார்கள் அவரும் வருவார்” என்றார்.

இதையும் படிங்க: ”மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல”... நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா அட்வைஸ்

தொடர்ந்து பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “இது ஒரு சவாலான விழாவாக அமையும். இதுவரை நடத்திய விழாக்களை விட இதனை சிறப்பான விழாவாக நடத்த ஏற்பாடு. டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் இந்தியாவில் தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடக்காது.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இளையராஜா, ஏஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்டோரை பார்த்து அழைக்கவிருக்கிறோம்.

அஜித், விஜய் ஆகியோரையும் அழைக்க உள்ளோம். 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ் சினிமா இந்திய அளவில் முன்னணியில் இருப்பதற்கு கருணாநிதியும் ஒரு காரணம். முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சி இது.

சிரஞ்சீவி, சிவராஜ் குமார், மோகன் லால், மம்முட்டி என அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறோம். இந்திய அளவில் உள்ள‌ அனைத்து பிரபலங்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்துள்ளோம். யார் யார் கலந்து கொள்கின்றனர் என்ற பட்டியல் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்றார்.

பின்னர் பேசிய கலைப்புலி தாணு, “கருணாநிதி சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது. நடனம், இசை நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். மற்றும் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்வார்கள்” என கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா விவகாரத்தில் 4 மணிநேரம் கெடு விதித்த மன்சூர் அலிகான்.. நடிகர் சங்கம் தவறு செய்ததா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.