ETV Bharat / state

ஆசிரியர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? - ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 6:47 PM IST

school education department order to all ceo to check the selected Dr Radhakrishnan Award teachers
school education department order to all ceo to check the selected Dr Radhakrishnan Award teachers

Dr. Radhakrishnan Award: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 5-ஆம் தேதி வழங்கப்பட உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

முன்னாள் குடியரசு தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசுகள் சார்பாகவும் நாளை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுத் தோறும் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து மாநில அளவில் விருதிற்கான ஆசிரியர்கள் தேர்வுச் செய்யப்படுகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 380 ஆசிரியர்கள் தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளனர்.

நாளை வழங்கப்பட உள்ள விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வித்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு பிறகே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விருது பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் விருது பெற்ற ஆசிரியர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பவர்களாகவும், மது அருந்திவிட்டு பணியாற்ற கூடியவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்திருக்கின்றன. இது பள்ளிக்கல்வித்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றன. எனவே இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 மாத விண்வெளி ஆராய்ச்சி நிறைவு! சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.