ETV Bharat / state

'பிரதமர் மோடி தமிழுக்காக எதுவும் செய்யவில்லை' - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 29, 2022, 7:34 PM IST

பிரதமர் மோடி தமிழுக்கு நிறைய செய்துள்ளதாக பாஜக தலைவர் கருத்துக்கு, அவர் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வெள்ள பிரசாத் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், சட்டப்பேரவை உறுப்பினர் பழனி நாடார், ஹசன் மௌலானா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக "அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்- கையோடு கைகோர்ப்போம்" என்ற நிகழ்விற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி உடைய மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜனவரி 26ஆம் தேதி அன்று "அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்" என்ற பரப்புரை இயக்கம் 2 மாதகாலம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பொதுக்கூட்டம் நடத்த திட்டம் என்றும்; மாநில அளவில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்த வேண்டும் எனவும்; ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் குறித்த காணொலியை கிராமம்தோறும் திரையிடுவது குறித்தும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

கே.எஸ். அழகிரி
'பிரதமர் மோடி தமிழுக்காக எதுவும் செய்யவில்லை' - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, "சட்டமன்றத் தொகுதிக்கு 100 காங்கிரஸ் கொடி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23,400 காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்பட உள்ளன. வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.

மோடி தமிழுக்கு நிறைய செய்துள்ளதாக பாஜக தலைவர் கருத்து தெரிவித்து வருகிறார். மொத்தம் உள்ள 6 செம்மொழிகளில், 5 மொழிகளுக்கு கொடுத்ததை விட சமஸ்கிருத மொழிக்கு 22 சதவீதம் அதிகமாக கொடுத்துள்ளார். தமிழுக்காக சிறப்பாக ஏதும் செய்யவில்லை. தவறான கருத்துகளை தமிழக பாஜக தலைவர் பேசிவருகிறார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமைப்பயணம் இந்தியாவை ஒன்றுபடுத்தவே என முதலமைச்சர் கூறி உள்ளார். அதற்காக அவருக்கு தமிழக காங்கிரஸ் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்து நேரடியாக தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம். கரும்பு விவசாயிகளின் கஷ்டத்தை துடைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிக்கு முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்விக்கு, ’தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கான பதிலை நான் சொல்லவே மாட்டேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க: மதப் பிரசாரம் செய்கிறாரா பிரபு சாலமன்? - பட விழாவில் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.