ETV Bharat / state

தாம்பரம் திமுக எம்எல்ஏவின் செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்

author img

By

Published : Sep 24, 2022, 9:57 AM IST

தாம்பரம் திமுக எம்எல்ஏவின் செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்
தாம்பரம் திமுக எம்எல்ஏவின் செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்

இடம் காலி செய்யும் விவகாரம் தொடர்பாக தாம்பரம் திமுக எம்எல்ஏவின் செயலுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு, இடம் காலி செய்வது தொடர்பாக தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டியது தொடர்பான வீடியோ வெளியானது. இதனையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அலுவலர்களை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது என்ற வரிசையில் தற்போது காவல் துறைக்குள்ள அதிகாரத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், தனியருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருவதாகவும், குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், நிலத்தின் உரிமையாளர் இடத்தை காலி செய்து கொடுக்கும்படி தனியார் நிறுவனத்தை வற்புறுத்தியதாகவும், ஆனால் குத்தகை காலம் முடிவடையாத சூழ்நிலையில் இடத்தை காலி செய்து தர முடியாது என்று தனியார் நிறுவனம் தெரிவித்து விட்டதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக தனியார் நிறுவன அலுவலரை தொலைபேசியில் அழைத்து இடத்தை காலி செய்து தருமாறு திமுகவைச் சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மிரட்டும் தொனியில் கேட்டுக் கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் சென்ற தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அங்குள்ள நிறுவன அலுவலர்களை நாகரீகமற்ற முறையில், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டியதாகவும், இதுகுறித்து ‘தலைமைச் செயலகத்தில் புகார் அளிப்போம்’ என்று தெரிவித்ததற்கு, ‘நிறுவனத்தை இழுத்து மூடிவிடுவோம்’ என்று அச்சுறுத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்ற உறுப்பினரின் பணி என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் தெரு விளக்குகள் எரிகின்றனவா என்பதைக் கவனிப்பது,

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதி மக்களுக்கு எந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்பது, பழுதடைந்த சாலைகளை பராமரிப்பதற்கான பணிகளை மேற்கொள்வது போன்றவையாகும்.

இதை விடுத்து ஓர் இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக இடத்தை காலி செய்து கொடுக்குமாறு ஒரு தனியார் நிறுவனத்தை மிரட்டுவது என்பது சட்டமன்ற உறுப்பினரின் பணியே அல்ல.

இது குறித்த வழக்கு காவல் துறையில் நிலுவையில் உள்ள நிலையில், காவல்துறையை முற்றிலும் புறக்கணித்து, தனியார் நிறுவனத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் நுழைந்தது என்பது சட்ட விரோதமான செயல். இடத்தின் உரிமையாளருக்கு உண்மையிலேயே பாதிப்பு இருக்குமேயானால், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை கூற வேண்டுமே தவிர, சட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கையில் எடுத்துக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதுபோன்ற செயல் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு வழி வகுக்கும்.

திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இருந்தாலும், இந்த வழக்கினை நீர்த்துப் போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வதோடு, இதுபோன்ற அத்துமீறலில் அரசியல்வாதிகள் ஈடுபடாதிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, காவல்துறை மூலமும், நீதிமன்றத்தின் மூலமும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கையினை எடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இடம் காலி செய்வது தொடர்பான விவகாரம்.. தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டியதாக திமுக எம்எல்ஏ மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.