ETV Bharat / state

"ஆளுநர் சிறப்பு நிதியில் ரூ.11.32 கோடி வீட்டுச்செலவு கணக்கிற்கு மாற்றம்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

author img

By

Published : Apr 10, 2023, 7:26 PM IST

Updated : Apr 10, 2023, 7:51 PM IST

nearly
சிறப்பு

ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதியில் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் ஆளுநரின் வீட்டுச்செலவு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், இது விதி மீறல் என்றும் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்.10) ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, அட்சயப் பாத்திரம் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், "ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, பெட்டி செலவு (petty grants) என மூன்று பிரிவில் நிதி ஒதுக்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 2 கோடியே 80 லட்சமும், இந்த ஆண்டு 3 கோடியே 63 லட்சமும் ஆளுநர் மாளிகைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 75 லட்சம் நிதியை அதிகமாக முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். ஆளுநருக்கான வீட்டு செலவுக்கு கடந்த ஆண்டு 15 கோடியே 93 லட்சம் என்று இருந்ததை, இந்த ஆண்டு 16 கோடி 69 லட்சம் ஆக அதிகப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை 2011- 12ல் 8 லட்சம் ரூபாய், 2012- 13ல் 8 லட்சம் ரூபாய், 2016- 17ல் 5 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய், 2018-19ல் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் என பெட்டி செலவுக்காக நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. அடுத்த மூன்று மாதத்திலேயே 50 லட்சமாகவும், அடுத்த மூன்று மாதத்தில் 5 லட்சமாகவும் இந்த பெட்டி செலவு நிதியை உயர்த்தியுள்ளனர். 2 கோடி, 2 கோடி என மொத்தம் நான்கு கோடி ரூபாய் அட்சய பாத்திரத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அட்சய பாத்திரம் என்ற காரணத்தை சொல்லி, ஆளுநர் உடைய வீட்டு செலவு வங்கி கணக்கில் அந்த நிதி மாற்றப்பட்டுள்ளது. மீதி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது.

பெட்டி செலவு என்ற கணக்கில் மொத்தம் 18 கோடியே 38 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 கோடி 38 லட்சத்தில், 11 கோடியே 32 லட்சம் அவர்கள் கணக்குக்கு மாற்றப்பட்டது, அதை எங்கே செலவு செய்தார்கள் என்று அரசுக்கு தெரியாது. இது விதிமுறை மீறல். அட்சய பாத்திரம் என்று பெயரை சொல்லி ஆளுநருடைய வீட்டுச் செலவு கணக்கில் நிதி மாற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் சிறப்பு நிதி என்ற பிரிவில் அனைத்து மாநிலத்திலும் மிகவும் குறைவாகவே நிதி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 2021ஆம் ஆண்டு வரை இந்த நிதி எல்லாம் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெட்டி செலவு என்ற ஆளுநருக்கான நிதியில் பாஜக ஆளுகின்ற கர்நாடகாவில் 25 லட்சமும், கேரளாவில் 25 லட்சம், மேற்குவங்கத்தில் 25 லட்சமும் என்றுதான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் செப்டம்பர் 2021-க்கு முன்பு இந்த நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021 பிறகு யு.பி.எஸ்.சி மாணவர்கள் கூட்டத்திற்கு 5 லட்சமும், தேனீர் விருந்துக்கு 30 லட்சமும், ஊட்டி ராஜ்பவனில் கலாச்சார விழாவிற்கு 3 லட்சமும் என இந்த நிதி செலவிடபபட்டுள்ளது.

இந்த பிரிவில் ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு என போனஸ் என்று ஒரு முறை 18 லட்சம் என்றும், ஒரு முறை 14 லட்சம் என கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவுகள், திருமண உதவிக்கோ, பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டிய நிதி ஆகும். ஆனால் ஆளுநர் நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அரசு நிதியை விதிமீறி ஆளுநர் நிதி மாற்றியுள்ளனர். இனி இதுபோன்ற விதிமுறை மீறல் தடுக்கப்படும். உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

Last Updated :Apr 10, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.