ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

author img

By

Published : Apr 10, 2023, 6:30 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அரசியல் அழுத்தம் காரணமாகவே ஆளுநர் இந்த முடிவை எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Online
தமிழக

சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கடந்த மார்ச் 8ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூறி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

அதன் பிறகு, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதாவை கடந்த மாதம் தமிழக அரசு மீண்டும் பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதனிடையே தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று(ஏப்.10), தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தனித் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடுவது குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாகவும், அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விமர்சித்திருந்த நிலையில், திடீரென ஆளுநர் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆளுநரின் இந்த முடிவு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவு என்றும், கட்சிகளைப் போலவோ, கட்சிகளை சார்ந்தோ ஆளுநரால் முடிவு எடுக்க முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆளுநரின் இந்த முடிவு அரசியல் அழுத்தத்தால் எடுக்கப்பட்டது என்று மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சித்துள்ளனர். மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டால் அது நிராகரிக்கப்பட்டதற்கு சமம் என்று பேசிய ஆளுநர் இப்போது ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் என்றும், ஆளுநரை பிரதமர் அலுவலகம் கடிந்து கொண்டதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை செய்திருப்பதாக யார் கூறினாலும், அது எதார்த்தமானது அல்ல, ஆளுநரைக் காப்பாற்ற வேண்டுமென்ற கட்டாயத்தில் செல்வதுதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆர்என்.ரவி ஆளுநராக அல்லாமல் ஆர்எஸ்எஸ் காரராக செயல்பட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை என்றும் கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் செய்த தாமதம் ஏற்க முடியாதது என்றும், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அவர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால், அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும் என்றும், மீண்டும் ஒரு சட்டம் இயற்றும் தேவையும் இருந்திருக்காது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

  • தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
    எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... pic.twitter.com/Ul59jQAEbV

    — Kirachand (@Kirachand4) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆளுநர் ஆர்என்.ரவியை பலரும் விமர்சித்து வருகின்றனர். காலையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாலையில் வேறு வழியின்று ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.