ETV Bharat / state

ஜெருசலேம் புனித யாத்திரைக்கு கூடுதலானோர் பயணிக்க முதல்வர் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : Jul 16, 2023, 2:04 PM IST

ஜெருசலேம் புனித யாத்திரை குறித்து பேட்டி அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
ஜெருசலேம் புனித யாத்திரை குறித்து பேட்டி அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ஜெருசலேம் புனித யாத்திரை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜெருசலேம் புனித யாத்திரை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கடந்த காலங்களைவிட கூடுதலானோர் செல்ல முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதான புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடமும் சென்னை வழியாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் 3 ஆயிரத்து 954 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த 58 பேர், அந்தமான் நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த 149 பயணிகள் என மொத்தம் சென்னை விமான நிலையத்தில் இருந்து 4 ஆயிரத்து 161 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 150 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த ஹஜ் பயணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பிய விமானம் தாமதமானபோதிலும் நீண்ட நேரம் காத்திருந்து தமிழகம் திரும்பியவர்களை பயணிகளின் உறவினர்கள் ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், “முதலமைச்சரின் நடவடிக்கையால் சென்னையில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்டுவிட்டு பயணிகள் தமிழகம் திரும்பி உள்ளனர். ஹஜ் பயணம் சென்று வந்தவர்களை முதலமைச்சரின் சார்பாக வரவேற்றோம்” என்றார்.

ஜெருசலேம் புனித யாத்திரை திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கொரோனா காலத்திற்குப் பின்னர் தற்போது, ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. கடந்த காலங்களை விட கூடுதலானோர் பயணிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜெருசலேம் செல்வோருக்கு மானியமாக 37 ஆயிரம் ரூபாயும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூபாய் 60 ஆயிரமாக மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் பயணத்திற்கு மானியமாக ரூபாய் 10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தகுதியுள்ள முதல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் பிரித்து வழங்கப்படும். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட சட்ட வல்லுநர்களின் குழு அறிவுரைப்படி செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சிறப்பான நடவடிக்கைகளும், ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. பயணம் தொடங்கியது முதல் திரும்பி தமிழகம் வரும் வரை முறையாக எங்களை வழிநடத்தினர். தனியார் டிராவல்ஸ் மூலம் சென்றால் 7 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் செல்வதால் 4 லட்சம் செலவாகிறது” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்’ : விண்ணப்ப பதிவு ஜூலை 24ஆம் தேதி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.