சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கலைச் சேவையை பாராட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்று குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு திரைத்துறையினர் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் விஜயகாந்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனது அருமை நண்பர், அமரர் விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. அது மட்டுமின்றி பத்ம விருதுகள் புத்தகத்தில் அவரது வரலாற்றை பதிவிட்டுள்ளனர். அது விஜயகாந்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இன்றளவும் விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சட்டென்று தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் நாமம் வாழ்க" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் இளையராஜா இசைக் கச்சேரி.. எப்போது? டிக்கெட் விலை என்ன? முழு விவரம்! - Ilaiyaraaja Live Concert In Chennai