ETV Bharat / state

சென்னையில் 11 செ.மீ. மழை பெய்திருந்தாலும்...1 மணி நேரத்திற்குள் மழைநீர் வடிந்து விட்டது - அமைச்சர் கே.என்.நேரு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 11:05 PM IST

minister-kn-nehru-inspects-and-confirmed-that-rainwater-stagnant-in-roads-have-been-cleared-in-chennai
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு

பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு, மூன்று நாட்களில் ஒரே நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்திருந்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து விட்டது. அந்த அளவிற்குப் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் களப் பணியாற்றி உள்ளனர் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ரிப்பன் கட்டடத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் இணைப்புப் பணிகள் 9 இடங்களில் மட்டும் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இளையாமுதலி தெருவில் மட்டும் 560 மீ. என மொத்தம் 3000 மீ. மட்டும் தான் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்தப் பணிகளும் குடிநீர் இணைப்பு மற்றும் கேபிள் பதிப்பு பணிகளின் காரணமாகக் காலதாமதம் ஆகிறது. மேலும், மழைநீர் வடிகால் பணிகளில் 98% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2%பணிகள் மட்டுமே இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சென்னை மாநகரில் மழைநீர் தேங்காதவாறு அலுவலர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் பணிபுரிய ஏதுவாக சென்னைக் குடிநீர் வாரியத்தில் 2 ஆயிரம் பேரும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரம் பேரும் தயார் நிலையில் உள்ளனர். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலமாக வடசென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்: இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் வாய்கள் இணைப்புப் பணிகள் முடிவடையாத இடங்களில் குழாய் பதித்து மேற்கொள்ளப்பட்டுள்ள இணைப்பு நடவடிக்கைகளும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார்நிலையில் வைத்தல், நிவாரண மையங்கள், சமையல் கூடங்கள் ஏற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது. மேலும், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும்." என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி நீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்..! மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.