ETV Bharat / state

ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறி விமான நிலையத்திற்குள் சென்ற ஆசாமி - 4 மணி நேரம் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு!

author img

By

Published : Aug 15, 2023, 12:48 PM IST

airport
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தையொட்டி ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்து அனுமதியின்றி விமான நிலையத்திற்குள் நுழைந்து 4 மணி நேரம் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், 7ஆம் எண் வாயில் வழியாக, நேற்று(ஆகஸ்ட் 14) மாலை 6 மணி அளவில், இளைஞர் ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அந்த இளைஞரிடம் விமான டிக்கெட் அல்லது உள்ளே நுழைவதற்கான சிறப்பு அனுமதிக்கான பாஸ் எதுவும் இல்லை. ஆனாலும், அந்த 7ஆம் எண் வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த இளைஞரை எந்தவித விசாரணையும் இன்றி உள்ளே அனுப்பிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த இளைஞர் உள்ளே சென்று பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளை கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் கவுண்டர் பகுதி வரை சென்று, அங்கு சுற்றி அலைந்து கொண்டிருந்தார். ஆனால், அப்போதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே அந்த இளைஞர், நேற்று இரவு 10 மணியளவில் குடியுரிமை அலுவலக கவுண்டர் பகுதியில் நின்று, ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். அப்போது, குடியுரிமை ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து, சென்னை விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

விமான நிலைய மேலாளர் விசாரணை நடத்திய போது, அந்த இளைஞர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், இவர் கடந்த மே மாதம் 5ஆம் தேதி இலங்கையிலிருந்து சென்னை வந்து, எழும்பூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவரிடம் இரண்டு ஸ்டிக்கர்கள் இருந்தது. அதில், ஈழத் தமிழர் பாதுகாப்பு கழகம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த இலங்கை இளைஞர் மூன்று மாத விசாவில், இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளதாக தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக, யாரைப் பார்க்க சென்னை வந்தார்? என்பது தெரியவில்லை. இந்த இளைஞர் எதற்காக சென்னை விமான நிலையத்திற்குள், எந்தவித அனுமதியும் இல்லாமல் நுழைந்தார்? இவர் தீவிரவாத கும்பலோடு தொடர்புடையவரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் நேரத்தில், எந்த விதமான ஆவணமும் இல்லாமல், இலங்கை இளைஞர் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார்? என்றும் விசாரித்து வருகின்றனர்.

விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு இளைஞர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமான பாதுகாப்பு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: Independence Day 2023: "நேஷன் ஃபர்ஸ்ட்.. ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்" - புதுவிதமாக தேசப்பற்றை வெளிப்படுத்திய குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.