ETV Bharat / state

நில அபகரிப்பு விவகாரம்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி!

author img

By

Published : Jun 7, 2023, 12:43 PM IST

highcourt
நில அபகரிப்பு

நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மகேஷுக்கு எதிராக டி.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்க கூடாது என மகேஷ் தரப்பிலும் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ரயில் விபத்தில் காயமடைந்தோர் குறித்து திமுக முரணான தகவல்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மகேஷுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன் ஆஜராகி, கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனால், மான நஷ்ட ஈடு கோரி தாங்கள் தொடர்ந்த வழக்கை எதிர்த்து மகேஷ் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார். புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை என்பதால், கடந்த ஆண்டு புகார் அளித்தாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மகேஷின் நிராகரிப்பு மனு மீதான உத்தரவை நீதிபதி குமரேஷ்பாபு இன்று(ஜூன் 7) பிறப்பித்தார். அதன்படி ஜெயக்குமார் வழக்கிற்கு எதிரான மகேஷின் நிராகரிப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம், மகேஷுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என தெரிய வருகிறது.

இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.