ETV Bharat / state

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா பணிச்சான்று வழங்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 7:08 AM IST

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா பணிச்சான்று
சென்னை உயர்நீதிமன்றம்

COVID-19 certificate: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு "கரோனா பணிச்சான்று” வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற உரிமை உள்ளது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு "கரோனா பணி" சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், காலியாக இருந்த ஆயிரத்து 21 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் 2022 அக்டோபர் 11-இல் அறிவிப்பாணையை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட்டில் சுகாதாரத்துறை ஒரு உத்தரவினை பிறப்பித்தது. அதில், கரோனா காலத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், அதற்கு கோவிட் பணிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கரோனா காலத்தில் பணியாற்றியதாகக் கூறி, தனியார் மருத்துவர்கள், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோன்று, கரோனா பணிச் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து, கரோனா காலத்தில் பணியாற்றிய அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது. விசாரணையில், கரோனா காலத்தில், 84 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மருத்துவர்களின் உன்னதமான சேவையை அங்கீகரிக்கும் விதத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக, அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது.

மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் ஆற்றிய பணி, அவர்களின் 36 மாத பயிற்சி காலமாகத்தான் கருத முடியும் என்பதால், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க முடியாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவர்கள் வழக்கைப் பொறுத்தவரை, அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் முடிவில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் தனியார் மருத்துவர்களின் சேவைகள் பாராட்டும் வகையில் இருந்தாலும், அவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றினார்களா என சரிபார்க்க நடைமுறை ஏதும் இல்லை என்பதாலும், ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதாலும், அரசின் முடிவு அரசியலமைப்பு விதிகளை மீறியது ஆகாது எனக் கூறி, தனியார் மருத்துவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களும், அரசு மருத்துவர்களுக்கு இணையாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, உயிரையே துச்சமாக மதித்து பணியாற்றிய அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது என உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கு தொடுத்த முதுநிலை மாணவர்கள் மட்டுமின்றி, கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய முதுநிலை மாணவர்கள் அனைவரும், கரோனா பணிச் சான்றிதழ் கேட்டு, 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம். அவர்களுக்கு, 5 நாட்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.