ETV Bharat / state

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 2:28 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ma Subramanian: ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், “நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மனநல சேவை” திட்டத்தின் இரண்டாவது பிரிவினை, இன்று (ஜன.9) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மனநல சேவை திட்டமானது, கடந்த அக்டோபர் 27, 2022ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மனநல சேவை திட்டத்தில் மனநல மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துநர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களின் மூலம், மனநல சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மனநல சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது, பொதுமக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மனநல ஆலோசனைகளுக்காக பெறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீத அழைப்புகள் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களுடைய அழைப்புகளாகும். மன உளைச்சல், அதீத மனக்கவலை, உறவு சார்ந்த சிக்கல்கள் மற்றும் இதர உளவியல் பிரச்சினைகள் சார்ந்த அழைப்புகள் அதிகம் பெறப்பட்டுள்ளன.

மேலும், டெல்லியில் நடந்த ‘உலக மனநல நாள் விழாவில்’ “நட்புடன் உங்களோடு ” (Tele MANAS-14416) சேவை மூலம், ஓராண்டில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை கையாண்டதற்கான மத்திய அரசின் விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. 25 மனநல மருத்துவர்கள், ஆண்டுக்கு 18 முதுகலை மாணவர்கள் என 54 முதுகலை மனநல மருத்துவ மாணவர்கள், 3 மருத்துவ உளவியலாளர்கள் மற்றும் 10 முதுகலை உளவியல் மாணவர்களைக் கொண்டு இயங்கி வரும் உயர் சிறப்பு மனநல மருத்துவனையில், இன்று நட்புடன் உங்களோடு இரண்டாவது பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

104 என்ற அவசர உதவி எண் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கும் விதமாக, மனம் என்னும் மனநல நல்லாதரவு மன்றங்கள் தொடங்கப்பட்டு, பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகளின் மூலம், மாணவர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர்கள் மத்தியில், தற்கொலை மேற்கொள்ளும் எண்ணம் தடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. மாடுபிடி வீரர்களின் காயங்களுக்கு கட்டு போடுவது, தேவையான மருந்துகளை வழங்குவது போன்ற பணிகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு செய்யப்படுகிறது. மேலும், போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மருத்துவ அலுவலர்களோடு, தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.. ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.