ETV Bharat / state

அகவிலைப்படி உயர்வு என்பது உரிமை; கருணை அல்ல: ஓ.பன்னீர்செல்வம்

author img

By

Published : Jan 9, 2023, 10:47 AM IST

அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல எனவும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது மாநில அரசும் உயர்த்த வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல எனவும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது மாநில அரசும் உயர்த்த வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1971-76 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எட்டு முறை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. இதனை சரி செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கி அவர்களை பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்.

2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அதற்கு ஒரு பங்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, மத்திய அரசால் அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து ஆறு மாத கால தாமதத்திற்குப் பிறகு தி.மு.க. அரசு வழங்கி வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜன.1ஆம் தேதி உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. பொதுவாக, அகவிலைப்படி உயர்வு வழங்கும் ஆணையை வெளியிடும்போது, மத்திய அரசின் அறிவிக்கையை மேற்கோள்காட்டி ஆணைகள் வெளியிடப்படுவது மரபு.

2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு ஆணைகளிளும் மத்திய அரசின் அறிவிக்கைகள் மேற்கோள் காட்டப்பட்டன. தற்போது, அகவிலைப்படி உயர்வு குறித்து ஜன.6ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணைகளில் மத்திய அரசின் அறிவிக்கை அல்லது கடிதக் குறிப்பு மேற்கோள் காட்டப்படவில்லை. இது அரசு ஊழியர்கள் மத்தியிலே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மத்திய அரசின் அறிவிக்கையை மேற்கோள்காட்டினால் அகவிலைப்படி உயர்வு தாமதப்படுத்துவது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும் என்பதற்காகவும், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போதெல்லாம் மாநில ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதை அரசு உணர்த்துவதற்காகவும் இந்த புதிய முறை கடைபிடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தரவுகளை மையமாகக் கொண்டு நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து கொண்டு வரும் தி.மு.க. அரசு, இதுபோன்ற புதிய யுக்திகளின் மூலம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதை தொடர்ந்து தாமதப்படுத்த முனைகிறதோ என்ற அச்சமும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுகிறது. அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல. மத்திய அரசின் அறிவிக்கையை மேற்கோள் காட்டினால்தான் அது உரிமையின் அடிப்படையில் தரப்படுவதாக அமையும். இல்லையெனில், ஏதோ கருணை அடிப்படையில் தரப்படுவது போல் அமைந்துவிடும்.

தற்போதைய அகவிலைப்படி உயர்வு ஆணைகள் உரிமையை நிலைநாட்டுவதுபோல் இல்லை. 'திராவிட மாடல்' என்பதற்கேற்ப தி.மு.க. அரசு எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுதுதான் கொடுக்கும் என்ற அதிகாரப் போக்கினை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உணர்த்துவது போல் அமைந்துள்ளது. மீண்டும், அகவிலைப்படிக்கு அல்லல்பட வேண்டுமோ என்ற அச்சத்தில் அரசு ஊழியர்கள் உறைந்து போயிருக்கிறார்கள். இந்த ஆணைகளில் உள்நோக்கம் இருக்கிறது என்று அரசு ஊழியர்கள் கருதுகிறார்கள்.

இதன்மூலம், எதிர்க்கட்சியாக இருக்கும்போது உரிமையை நிலைநாட்டுவோம் என்று கூறுவதும், ஆளும் கட்சியாக இருக்கிறபோது அதனை பறிப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை என்பது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மாற்றியமைக்கப்பட்டதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் அதே தேதியிலிருந்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவர் ஷர்மிகாவுக்கு வந்த புதிய சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.