ETV Bharat / state

நடுங்க வைத்த நாங்குநேரி சம்பவம்.. பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் அவசியம்!

author img

By

Published : Aug 15, 2023, 10:25 PM IST

Etv Bharat
Etv Bharat

Nanguneri Student Attack issue: தமிழ்நாட்டையே நடுங்க வைத்த நாங்குநேரி பட்டியலின பள்ளி மாணவர் மீதான சக மாணவர்களின் கொடூர தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியானவற்றை கற்பிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கல்வியாளர் உமா மகேஸ்வரி கூறிய கருத்துகளை காண்போம்...

கல்வியில் மாற்றம் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை வழிவிட வேண்டும் - அரசுக்கு உமா மகேஸ்வரி கோரிக்கை

வீட்டில் இருந்து சமூகத்தில் உள்ள பொது புத்தியுடன் வரும் பள்ளிக்கு மாணவர்களுக்கு எது சரியானது? என கற்பிக்கும் பணியை ஆசிரியர்கள் செய்கிறார்களா? என்றால் கிடையாதெனவும், இத்தகைய விவகாரங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், அமைச்சரும் இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கான மாற்றங்களை கொண்டுவர வேண்டுமெனவும் கல்வி செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களை பெறுவதற்காக மட்டுமே படிக்க வைக்காமல் அவர்களுடன் சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை பேசும் வகையிலும் வகுப்பறை சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு விதமான திட்டங்கள் இருப்பதால், ஆசிரியர்களும் அத்திட்டங்களின் பின்னால் ஒடக்கூடிய வேலையை மட்டும் தான் செய்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான நன்னெறி மற்றும் ஒழுக்கங்கள் கற்பிக்கப்படாமல் உள்ளதுவும், சமூகத்தின் செயல்பாடுகளும் இது போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

நடுங்க வைத்த நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடம் சாதிய வன்மங்கள் வளர்வதற்கு காரணமாக உள்ளவைகள் குறித்தும், பள்ளிகளில் நடைபெறும் செயல்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கல்வி செயற்பாட்டாளர் சு.உமா மகேஸ்வரி நமது ஈடிவி பாரத்திடம் இன்று (ஆக.15) கூறும்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு நடைபெற்ற சம்பவம் யாரும் மறக்கவே முடியாது. ஒரு சமுதாயத்தில் சாதி எந்தளவிற்கு தலை தூக்கியுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமானது.

காலங்கள் மாறினாலும் சாதிய வன்மம் மாறவில்லை: ஆனால், பள்ளி மாணவர்கள் ஒடுக்கப்பட்ட ஒரு மாணவரை அரிவாளால் உயிர்ப்போக்கும் அளவிற்கு வெட்டியுள்ளதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சாதிய ஒடுக்குமுறை என்பது இங்கு காலம் காலமாக இருக்க கூடிய விஷயம். இன்று சமூகம் மாறி மேம்பட்டு வரும் நிலையிலும், சாதிய வன்மம் மாறவே இல்லை. இதனைப்பார்த்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அம்மாணவருக்கு உதவி செய்து உயர்கல்வியை தருவதாகவும், அரசு மாணவர்களுக்கு நிறைய செய்வதாகவும் தெரிவித்துள்ளது சந்தோஷம். அவரின் செயல் வரவேற்கத்தக்கது என்றார்.

ஆசிரியர்களும் மாணவர்களும் உரையாடுவதே கிடையாது: கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறை நிறைய திட்டங்களை கல்வித்துறையை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதற்கு பள்ளியும் தான் காரணம். சமூகத்தில் நடைபெறும் சமூக அவலங்களுக்கு தீர்வு காணும் இடமாக தற்பொழுதைய பள்ளியின் சூழல் இல்லாமல் உள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் பேசிக் கொள்வதே கிடையாது.

இதையும் படிங்க: "அரசின் பெருமை பேசுவதை விடுத்து, மாணவர்களை கவனிக்க வழி செய்க" - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!

சமத்துவம் போதிக்கும் வகுப்பறைக்குள் 'சாதிய வன்மம்' என்ற நீங்காத கறை: பள்ளியில் மாணவர்களின் வீட்டுப்பாடத்தை முடிக்கவும், எழுதவும், படிக்கவும் அறிவுரை கூறுவது. பள்ளியில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் அவர்களிடம் உள்ள முதலுதவியை அளிப்பது தான். பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் ஒருபகுதியில் இருந்து வருவார்கள். சாதிய ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளும் வருவார்கள். அவர்களிடம் சகோதரத்துவம், சமத்துவம், மனித மாண்பு, இட ஒதுக்கீடு, அனைவரும் சமம் போன்றவற்றை பேச வேண்டும் இதுதான் வகுப்பறை. நாம் அதனை செய்வதே கிடையாதென' உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

நெருக்கடி தரும் திட்டங்களால் திணறும் ஆசிரியர்கள்: 'கடந்த 20 ஆண்டுகளாக திட்டங்களின் பின்னால் ஒடுவதாக கல்விமுறை மாறி விட்டது. அதிலும், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு விதமான திட்டங்களால் ஆசிரியர்களும் அந்த திட்டத்திற்கு பின்னால் ஒடக்கூடிய வேலையை மட்டும் தான் செய்கின்றனர். எமிஸ் அப்டேட் (EMIS - Education Management Information Centre TN) செல்போனை வைத்துக் கொண்டு மாணவனை கவனிப்பதை விட போனை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

இதையும் படிங்க: சின்னத்துரைக்கு என்ன நடந்தது? தாய் அம்பிகாவதி கண்ணீர் மல்க பேட்டி!

எமிஸ் மாநில மையத்தில் இருந்து மாவட்டத்திற்கு வந்து, அதன் பின்னர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் குழுக்களில் போட்டு. ஆசிரியர் செய்யாத பணிகளை செய்து முடியுங்கள் என கூறுகின்றனர். அதற்கான பணிகள் மட்டும் தான் நடைபெறுகிறது. அதற்கு நம்மிடம் தேவையான ஆவணங்கள் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் கற்றுக் கொண்டார்களா? என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. களத்தில் குழந்தைகள் கல்விப் பெறாததாக கூறப்படும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் கல்வியே பெறவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

சாதிய வன்மம் வீட்டிலிருந்தே தொடர்கிறது: தன்னுடன் படிக்கும் மாணவரை இப்படித்தான் வெட்டி சாய்பார்களா? இந்த சாதிய வன்மம் வீட்டில் இருந்துத்தான் ஆரம்பித்திருக்கும். பள்ளிக்கூடங்கள் எங்குமே சாதியை கற்றுத்தருவது கிடையாது. சிலர் பள்ளிகளிலும் சாதி இருப்பதாக கூறுகின்றனர். பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் வீடுகளில் இருந்துதான் வருகின்றனர். எனவே, வீடுகளில் அவர்களுக்கு புகுத்தப்படுகிறது.

மாணவர்களின் மதிப்பெண்ணுக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள்: எனவே, ஆசிரியர்களை பண்படுத்த வேண்டிய வேலை பள்ளிக்கல்வித்துறைக்கு இருக்கிறது. ஆசிரியர்கள் வேலையாட்களாக இருக்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் பேசுவதற்கே நேரமில்லை. ஆசிரியர்கள் ஒடிக்கொண்டே இருக்கின்றனர். மாணவர்களுக்கு வீட்டிலும் சொல்வதற்கு ஆள் இல்லை. பள்ளியிலும் பாடத்தை படித்து மதிப்பெண் பெற வேண்டும் அவ்வளவுத்தான்.

சமூகவியல் ஆசிரியர்களுக்கு மிகுந்தப் பொறுப்பு உண்டு. எல்லா ஆசிரியர்களுக்கும் பொறுப்புண்டு. சமூகநீதி கற்றுத்தரப்படுவதே இல்லை. சமூகவியல் ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஆசிரியர்களும் புத்தகத்தை படித்து வெறும் முப்பத்து ஐந்து மதிப்பெண்களுக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். கடைசியில் தேர்ச்சி விழுக்காடு குறித்து பதில் அளிக்க வேண்டி நிலை இருப்பதால், அதனை நோக்கியே ஒடுகின்ற ஒரு அவலநிலையே நிலவுவதாக உமா மகேஸ்வரி சாடியுள்ளார்.

கடிகாரமாய் சுழலும் ஆசிரியர்கள் நிலைமை: அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாணவர் வாழ்க்கையில் தேர்ச்சி பெறுவதற்கான பணியை செய்கிறோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். இது போன்ற சூழ்நிலையையும் பேச வேண்டும். முன்பு தேசத்தந்தைகள் குறித்தும், ஒழுக்கம் குறித்தும் பேசுவோம். முன்பு எல்லாம் ஆசிரியர்களுக்கு ஒய்வு இருந்தது. அப்போது தான் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசுவதற்கு முன்வருவார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கு மனதில் ஒரு கடிகாரம் ஒடிக்கொண்டே இருக்கிறது.

கல்வி அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டியது?: தற்பொழுது 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலான கல்வி முறையை தான் கொண்டு வந்துள்ளோம். இது மாதிரியான சூழ்நிலையில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பேசுவதில்லை. மாணவர்கள் வீட்டில் இருந்து சமூகத்தில் உள்ள பொது புத்தியுடன் வரும் மாணவர்களுக்கு எது சரியானது? என கற்பிக்கும் பணியை ஆசிரியர்கள் செய்கிறார்களா? என்றால் கிடையாது. எனவே, துறை ரீதியாக இருக்க கூடிய அதிகாரிகளும், கல்வி அமைச்சரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளவேண்டியது என்ன?: தற்பொழுது வேலை திறன் சார்ந்தது. போட்டித் தேர்வுகளுக்கு மாணவரை தயாரிப்பது. சமூக அறிவியல் பாடத்தில் பல்வேறு தகவல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், எங்கும் உரையாடல் கிடையாது. மாணவர்களுக்கு தேவையானவற்றை கற்பிக்கும் வகையில் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை வழிவிட வேண்டும்.

அப்படி மாற்றம் நிகழ்ந்தால் பலர் மாற்றம் பெறுவார்கள். ஒரு நல்ல சமூக சூழலில் இருக்க வேண்டும் என்றால் நல்லக் கல்வியை கொடுக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது மாணவர்களுடன் உரையாடல் என்பது அவசியம்' என்று உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழ் பெண் - கல்பனா சாவ்லா விருது வழங்கி தமிழக அரசு கவுரவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.