ETV Bharat / state

"அரசின் பெருமை பேசுவதை விடுத்து, மாணவர்களை கவனிக்க வழி செய்க" - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!

author img

By

Published : Aug 13, 2023, 7:10 PM IST

minister
கோப்பு

பள்ளிகளில் அரசின் பெருமையைப் பேசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதும், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை அளிப்பதும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் உரையாடுவதையும், அவர்களை நல்வழிப்படுத்துவதையும் பாதிப்பதாகவும், இது போன்ற சூழலும் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்பட காரணம் என்றும் கல்விச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதியப் பாகுபாடு காரணமாக பள்ளி மாணவரை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை தாக்கிய சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், பள்ளி மாணவர்களிடையே சாதிய வன்மங்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரம் செலவிட முடியாத வகையில், தேவையற்ற பல வேலைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருவதாகவும், ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் இந்த பணிச்சுமையும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "உங்கள் காணொளி மீண்டும் மீண்டும் அரசின் பெருமைகளைப் பேசுகிறது. ஆனால், சிறுமையிலும் சிறுமையான சமூகத்தை இன்று கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

அதற்கு முதலில் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள். சமூகநீதி கற்றுத் தரப்படுவதே இல்லை. சமூகவியல் ஆசிரியர்கள் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களுக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். எவையெல்லாம் பள்ளிகள் பேச வேண்டுமோ அதெல்லாம் பேசுவதே இல்லை. குடும்பங்களில் நடக்கும் உரையாடல்களின் நீட்சியாகவே பள்ளிகளில் சாதிய வன்மம் பிரதிபலிக்கிறது.

பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்கள் அனைவரும் புள்ளி விவரங்கள் மட்டுமே சேகரிப்பவர்களாகப் போய் விட்டார்கள். வகுப்பறையிலும் பள்ளியிலும் சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பேசிய காலங்கள் இன்று இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்கும் உரையாடல்கள் பள்ளிகளில் இல்லை. திட்டங்களை செயல்படுத்தும் வேகமும் பெருமிதமும்தான் இங்கு உள்ளன.

வீட்டில் சாதி உணர்வு ஆழமாக விதைக்கப்பட்டு, அதே உணர்வுடன்தான் மாணவர்கள் பள்ளிக்குள் வருகிறார்கள். அதைக் களைவதற்கான சூழலைப் பள்ளிகள் கொண்டிருக்கின்றனவா? - பாடம், தேர்வு இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக்கூறும் கல்விமுறையில் எது சரி, எது தவறு என மாணவர்களுக்கு போதிப்பது பள்ளிகளின் கடமை இல்லையா? - ஆசிரியர்களை வெறும் வேலையாட்களாக மாற்றி வரும் கல்வித் துறைக்கு முதலில் வழிகாட்டுங்கள்.

நீங்கள் பள்ளிக்கல்வி அமைச்சராக பதவியேற்ற பிறகு, போட்டி மனப்பான்மையை விதைக்கும் திட்டங்களையும், தேர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஆணைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் இப்படி பிரிவினையோடு நடந்து கொள்கிறார்கள் என்றால், கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் பெற்ற கல்வியின் விளைவு என்ன?

பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வழிநடத்தி இருந்தால் இந்த சம்பவம் இத்தனை அதிகமாகப் போயிருக்காது. ஏன் அந்த சூழல் பள்ளிகளில் இல்லை?- பொத்தாம் பொதுவாக எல்லோருக்கும் அறிவுரை கூறுவதில் பயனில்லை. எத்தனைப் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பள்ளித் தலைமைகளை மிரட்டும் போக்கு நிலவுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? - மாணவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்கும் இடமாகத்தான் பல பள்ளிகள் இருக்கின்றன.

ஒரு புறம் பள்ளி ஆசிரியர்களின் மத்தியிலும் இந்த சாதிய பாகுபாடு இருக்கவே செய்கிறது. முதலில் களத்தில் என்ன நிகழ்கிறது? பள்ளிகளின் இன்றியமையாத கடமை என்ன? -ஆசிரியர்களின் தலையாய பணி என்ன? என்பதை ஆய்வு செய்து, பொறுப்புடன் பணியாற்ற கல்வித்துறையை வழிநடத்துங்கள்.

கல்வித்துறை புள்ளிவிவரத்துறை ஆனதும் இந்த வன்முறைக்கு ஒரு மிக முக்கியமான காரணம். ஆகவே, தயை கூர்ந்து சிந்தியுங்கள். நீங்கள் ஒரு மாணவரை படிக்க வைக்கப் போவதாக, உறுதி சொல்வதால் இந்த சூழல் மாறாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கல்வித்துறையை சரி செய்து, கற்பித்தலையும், ஆசிரியர் மாணவர் உறவையும் பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள். மாற்றங்கள் விளையும். பாதிக்கப்பட்ட மாணவருக்கு நம்பிக்கை பிறக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்: வருங்கால சமுதாயத்தினரின் வாழ்வை சீர்குலைக்கும் திமுக - ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.