ETV Bharat / state

தென்பாகம் பகுதியில் இருவேறு வீட்டில் கொள்ளையர்கள் துணிகரம்.. 105 சவரன் நகை திருட்டு! - Thenpagam jewel theft issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 5:35 PM IST

Theft in 2 houses in same day at Thoothukudi: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 வீடுகளில் ஒரே நாளில் நடைபெற்றுள்ள திருட்டுச் சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு நடைபெற்ற வீட்டின் முகப்புப்படம்
திருட்டு நடைபெற்ற வீட்டின் முகப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே எல்லைக்குட்பட்ட காவலர் ஒருவரது வீட்டிலும் நடைபெற்றுள்ள திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் நடந்துள்ள இருவேறு கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் நாகப்பட்டினம் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா, சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமான நிலையில், மற்றொருவருக்கு வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுகுமார் கடந்த மே 10ஆம் தேதி தனது குடும்பத்தைப் பார்க்க சென்னை சென்றுள்ளார். தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண், இவர்களது வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அமுதா இன்று (மே 18) காலை வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டு முன்பக்க கதவை திறந்த போது, உள்ளே கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர், மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளைச் சம்பவம் குறித்து சோதனை நடத்தினர். தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சோதனையில், சுகுமார் மகள் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த கொள்ளை கும்பல், வீட்டின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள், வீட்டில் இருந்த இரண்டு லாக்கரையும் அருகே இருந்த சாவியைப் பயன்படுத்தி திறந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதேபோல், பிரையண்ட் நகர் 5வது தெருவைச் சேர்ந்த காவலர் சங்கர் என்பவரது வீட்டிலும் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சங்கர். இவரது தகப்பனார் மாரிமுத்து மறைந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்.

இவர் நேற்று (மே 17) குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு, கோயில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.80,000 பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர். இன்று ஒரே நாளில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மீன் கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிராக சென்னை பட்டினப்பாக்கம் வியாபாரிகள் போராட்டம்! - Chennai Loop Road Fish Protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.