ETV Bharat / state

மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவோம் - ஸ்டாலின்

author img

By

Published : Mar 23, 2022, 10:32 AM IST

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.. நிச்சயமாக மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவோம் - ஸ்டாலின்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.. நிச்சயமாக மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவோம் - ஸ்டாலின்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு நிச்சயம் வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனிடையே, (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இதில், முதல் நாளில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். இதனையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 22) தொடங்கியது.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களின் நலன் சார்ந்து பல கேள்விகளை முன் வைத்தனர். இதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் வழங்கினார்கள். இதனிடையே, அசோக்குமார் (கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ) பேசுகையில், "இது வாக்கு ஜாலம் கொண்ட பட்ஜெட். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்கள். அது பட்ஜெட்டில் இல்லை. அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை பாதுகாத்து கண்காணிக்க 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

மேலும், அதுவும் பட்ஜெட்டில் இல்லை. நீர்நிலைகள், வனப் பகுதியைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் பிளஸ் 2 முடித்த 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில். இல்லை. மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை" என்றார்.

CM MK Stalin speech at tn Assembly
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - ஸ்டாலின்

இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக முதல்கட்டமாக 2,500 காவலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்" என்றார். அப்போது பேசிய, அமைச்சர் எ.வ.வேலு, 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்பதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் அனைத்தும் பகிர்ந்து நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.

இதனிடையே, அதிமுக உறுப்பினரின் கேள்விகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், பேரவைத் தலைவர் அவர்களே, அதிமுக.-வைச் சேர்ந்த உறுப்பினர் அவர்கள் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள்.

நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாகச் செய்து முடித்து விட்டீர்களா? என் கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அப்படிச் செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள். பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவேயில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன; அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் இப்போது சொல்கிறேன்.

நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை, குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய அதிலும் சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும் என்றார். அப்போது மீண்டும் மேசையைத் தட்டும் ஒலி எழுந்தது.

அதன் பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே, நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய இலட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை என்று தெரிவித்தார்.

மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் குறித்து அதிமுக உறுப்பினர் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், "முதன் முதலாக மக்கள் நலப் பணியாளர்களை நியமித்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். உங்கள் ஆட்சியில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். அதன் பிறகு அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியை கேட்டனர். அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக அரசு வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், வழக்கு முடிவுக்கு வந்த பிறகு நிச்சயமாக மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம்” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; திருமணம் அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.