ETV Bharat / state

பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை - சென்னை காவல் ஆணையர் அதிரடி!

author img

By

Published : Jul 4, 2023, 7:17 AM IST

பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை
பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், மீண்டும் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர்கள் யாரும் பணியில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை ஒன்றை தற்போது அனுப்பி உள்ளார்.

குறிப்பாக, பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும், இந்த கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

அதிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புப் பணி, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோயில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது காவலர்கள் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரி செய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது.

ஆகவே, இது போன்ற நேரங்களில், செல்போனை பயன்படுத்துவது காவலர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால் போக்குவரத்தை சரி செய்தல் மற்றும் விதி மீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தெரிவித்து உள்ளார். எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோர் அவர்களின் கீழ் பணிபுரியும் காவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்த வித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும், இந்த நெறிமுறைகளை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்ட வேண்டும். அதேபோல், தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இந்த நெறிமுறைகளை படித்துக் காட்டியும், இதை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: பாரத் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம்... 2030க்குள் அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.