ETV Bharat / bharat

பாரத் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம்... 2030க்குள் அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்!

author img

By

Published : Jul 3, 2023, 8:03 PM IST

அடுத்த தலைமுறைக்கான பாரத் 6ஜி தொழில்நுட்பத்தை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். 2030ஆம் ஆண்டுக்குள் அதிவேக இணைய சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

6G
6G

டெல்லி : மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அடுத்த தலைமுறைக்கான பாரத் 6ஜி தொலைதொடர்பு கூட்டமைப்பை வெளியிட்டார். நாட்டில் 5ஜி தொழில்நுட்ப சேவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான புதிய முயற்சி இது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பொதுத்துறை, தனியார் துறை மற்றும் பிற துறைகளின் கூட்டணியாக பாரத் 6ஜி கூட்டமைப்பு இருக்கும் என்றும் நாட்டில் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் 6ஜி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா 200க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்பட்ட நம்பகத்தன்மை, நேர தாமதம் குறைப்பு மற்றும் உடனடி தீர்வுகள் போன்ற மேம்பட்ட திறன்களை வழங்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அடுத்த சில வாரங்களில் தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களின் அடுத்த தொகுப்பையும் வெளியிட உள்ளதாகவும் 5ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் 6ஜி கிட்டத்தட்ட 100 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 6ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தகவல் தொடர்பு பயன்பாடுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.

பாரத் 6ஜி கூட்டமைப்பு அடுத்த 10 ஆண்டுகளில் தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள் துறையில் பல்வேறு அம்சங்களை மாற்றி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 6ஜி தொழில்நுட்பத்திற்காக தொலைநோக்கு ஆவணத்தை பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 மாதங்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் 5ஜி தொழில்நுட்ப தளங்கள் நிறுவப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் 5ஜி நெட்வோர்க் சேவையை விரைவாக பெறும் நாடுகளில் இந்தியாவுன் ஒன்றாக மாறி உள்ளதாக தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹான் தெரிவித்தார்.

மேலும் 6ஜி தொழில்நுட்ப திட்டம் தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தில் அதிவேக இணைய சேவையை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, அமிதாப் பச்சன் புகைப்படம்... மாணவர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.