ETV Bharat / state

கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் 516 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 9:40 PM IST

Updated : Oct 9, 2023, 10:47 PM IST

516 பேருக்கு மார்பக புற்றுநோய்: மருத்துவரின் அதிர்ச்சி தகவல்
516 பேருக்கு மார்பக புற்றுநோய்: மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

Cancer Awareness Programme: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன 3D டிஜிட்டல் மெமோகிராம் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட 14ஆயிரத்து 177 பேரில், 3.64 விழுக்காடு அதாவது 516 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

516 பேருக்கு மார்பக புற்றுநோய்: மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(அக்.08) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2018 ஜூன் மாதம் அதிநவீன 3D டிஜிட்டல் மெமோகிராம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான மையமாக 2019 ஜனவரி 3ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக 14 ஆயிரத்து 177 பேருக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையில் 757 பேருக்கு பயாப்ஸி (சதை பரிசோதனை) எடுக்கப்பட்டது. இதில் 516 (3.64%) பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் பொதுமக்களிடம் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைகள் பெற்று நலமோடு இருப்பவர்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மார்பக புற்றுநோய் அறிகுறிகளாக மார்பகத்தில் கட்டி, சீழ் வடிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமல்லாமல், 40 வயதிற்கு மேற்பட்ட எந்த மார்பக தொந்தரவும் இல்லாத அனைத்து பெண்களும் தாமாக முன் வந்து பரிசோதனை செய்துக் கொள்தல் வேண்டும்.

ஆரம்ப நிலையில் கால்சியம் நுண் படிமங்கள், மற்றும் 2 சென்டி மீட்டர் அளவிற்கு குறைவான கட்டியை கண்டறிவதால், மார்பகங்களை நீக்காமல் கட்டியை மட்டும் அகற்றி பூரணகுணம் அடையலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் இலவசமாகப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என விழிப்புணர்வின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர், "அக்டோபர் மாதம் 'பிங்க் அக்டோபர்' என வருடந்தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக அணுசரிக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான 3டி மெமோகிராம் இயந்திரத்தின் மூலம் 1 சென்டிமீட்டருக்கும் கீழ் உள்ள கட்டிகளையும் கண்டறிய முடியும்.

ஆசியாவிலேயே மிகச்சிறந்த முறையில் கண்டறிய முடியும் திறனாக உள்ளது. மேலும் புற்று நோய் அறிகுறியை வைத்து முன்கூட்டியே கண்டறிவதால், அவர்களுக்கு சரியான சிகிச்சை அளித்து இயல்பான வாழ்க்கை வாழ்கின்றனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை புற்றுநோய் மையம் ஆகியவை இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் குணமடைந்தோம் என கூறியதுடன், நன்றாக பார்த்துக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என நினைத்தோம். அவர்களும் தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளனர். புற்றுநாேயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த ஆதரவிற்கும் மருத்துவர்கள் தலை வணங்குகிறோம். மார்பக புற்றுநோய் வந்தால் சமூகத்தின் பார்வையையும் மீறி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

'பிங்க் அக்டோபர்' மாதத்தில் எல்லா மருத்துவமனையிலும் புற்றுநோய்க்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 40 வயதான பெண்கள், அவர்களே முன்வந்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மகப்பேறு மருத்துவர்கள் சொல்லித் தருகின்றனர். எப்படி பரிசோதனை செய்துக் கொள்வது என்பதை நோயாளிக்கு கற்றுத் தருகிறோம். சந்தேகம் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவர்களின் அறிவுரையில், தேவை என்றால் மட்டுமே மெமோகிராம் அல்லது வேறு பரிசோதனை செய்வார். தற்போது விருப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்கின்றனர். முன்கூட்டியே புற்றுநோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை சரியாக பின்பற்றி சிகிச்சை பெற்றால் இயல்பான வாழ்க்கையை வாழலாம்.

தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுப்புற சூழ்நிலை போன்றவற்றால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. முன்கூட்டியே பரிசோதனை செய்து, நோய் கண்டறியப்பட்டால், குறைவான சிகிச்சைகளே செய்யப்படுகின்றது. சிகிச்சை முடிந்தும் தொடர்ந்து பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

சுயபரிசோதனை செய்துக் கொண்டு, சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் துள்ளியமாக கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! டிச.3ல் வாக்கு எண்ணிக்கை!

Last Updated :Oct 9, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.