ETV Bharat / state

"நான் என்ன பேசணும்ணு நீங்களே சொல்லிடுங்க" - சட்டப்பேரவையில் நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்!

author img

By

Published : Apr 12, 2023, 7:59 PM IST

assembly
மதுவிலக்கு

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சபாநாயகர் அப்பாவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு பேச வாய்ப்பளிக்காததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்.12) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், மலரும் நினைவுகளாக சிலவற்றை பதிவு செய்வதாகக்கூறி பேசத் தொடங்கினார். தான் 7 ஆண்டுகள் மின்துறை அமைச்சராகவும், 5 ஆண்டுகள் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பழையதை பேச வேண்டாம் என்றார்.

பிறகு பேசிய நத்தம் விஸ்வநாதன் "நான் என்ன பேசணும்ணு நீங்களே சொல்லிடுங்க" என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, "பழைய விசயங்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், நாங்களும் பழையதை பேச முடியும். மேலும் 2 ஆண்டுகளாக சட்டமன்றத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம்" என்றார்.

அதற்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், "நீங்க இதுபோலவே செஞ்சா, நீங்க பேரவைத் தலைவரா இருக்கும் வரை நாங்க பேச மாட்டோம்னு முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறினார்.

அதற்கு சபாநாயகர், "முடிவெடுப்பது உங்கள் விருப்பம்" என தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, "2010-ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 2018-19ல் முடிந்து பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றை அதிமுக ஆட்சியில் முடிக்காமல் சென்று விட்டனர். சொந்த உற்பத்தியால் மின்சார தன்னிறைவு பெற முடியாது. ஆனாலும் நீண்ட கால கொள்முதல் மூலம் மின்வாரியத்திற்கு நிதி இழப்பு ஏற்படும். மின்வாரியத்தில் 1.60 லட்சம் கோடியளவு கடந்த ஆட்சியில் இழப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் எத்தனை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கினர்?" என்றார்.

இதற்கு தான் பதில் கூற அனுமதிக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் கேட்டபோது, சபாநாயகர் குறுக்கிட்டு, "இது விவாதம் இல்லை, உங்க நேரம் முடிஞ்சிருச்சு, உக்காருங்க" என்று கூறினார். சபாநாயகர் பேச அனுமதிக்காததால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: எதிர்கட்சிகளின் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.