ETV Bharat / state

கூடுதல் மின் கட்டணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

author img

By

Published : Sep 7, 2021, 4:34 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் கட்டணம் செலுத்துவதற்கான 419 கோடி ரூபாய் கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது முதலமைச்சரின் உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை: மானியக் கோரிக்கையின்போது பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் தங்கமணி, "கரோனா காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக ஆட்சியில் மின் கட்டணங்களை மக்கள் செலுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மொத்தம் 14.69 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

2020 ஜூலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 3,023 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை 789 கோடி ரூபாய். 2021 ஜூலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 4,494 மில்லியன் யூனிட். 1,471 மில்லியன் யூனிட் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது 48 விழுக்காடு பயன்பாடு உயர்ந்திருந்தாலும், வசூலிக்கப்பட்ட தொகை 869 கோடி ரூபாய் மட்டுமே. 2020 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு 3,025 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை 751 கோடி ரூபாய். 2021 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு 4,012 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை 789 கோடி ரூபாய்.

2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 987 மில்லியன் யூனிட், அதாவது 32 விழுக்காடு அதிக பயன்பாடு இருந்தாலும், 22 கோடி ரூபாய் மட்டும் தான் கூடுதல் கட்டணம்.

அதாவது 3 விழுக்காடு தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின் கட்டணம் செலுத்துவதற்கான 419 கோடி ரூபாய் கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது முதலமைச்சரின் உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சிங்காரச் சென்னை 2.0 திட்டம்: வருகின்றன 3 புதிய மேம்பாலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.