ETV Bharat / sports

SRH vs CSK: 'அனைத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாது...' - வெற்றிக்கு பின் தோனி சொல்லிய பாடம்

author img

By

Published : May 2, 2022, 8:09 AM IST

Updated : May 2, 2022, 1:50 PM IST

SRH vs CSK
SRH vs CSK

"ஜடேஜாவுக்கு கடந்த தொடரின்போதே, அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பு அவருக்குதான் கொடுக்கப்படும் என்பது தெரியும். மேலும், அவர் தயார் ஆவதற்கு தேவையான நேரமும் கிடைத்தது. கேப்டனாக இருக்கும்போது, நீங்கள் களத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவுகளுக்கு நீங்கள் கண்டிப்பாக பொறுப்பேற்றாக வேண்டும்" என சிஎஸ்கே கேப்டன் தோனி, ஜடேஜாவின் கேப்டன்ஸி குறித்து தெரிவத்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று (மே 1) மோதின. இந்த தொடரில் இருந்து சென்னையின் கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளுக்கு பிறகு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில், கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே அவர் ஒப்படைத்தார்.

மாற்றம்: இந்நிலையில், நேற்றைய போட்டி முதல் சென்னை அணியை தோனி வழிநடத்தினார். தொடர்ந்து, நேற்றைய பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்களை காண முடிந்தது. சிவம் தூபே, டுவைன் பிராவோ நீக்கப்பட்டு டேவன் கான்வே, சிமர்ஜித் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

SRH vs CSK
SRH vs CSK

தோனி வந்தார் - வெற்றியும் வந்தது: டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 202 ரன்களை குவித்து அசத்தியது. தொடர்ந்து, ஹைதராபாத் அணி மிரட்டலான தொடக்கத்தை அமைத்தும், கடைசி நேரத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தனது 3ஆவது வெற்றியை பதிவு செய்தது.

வெற்றியை தொடர்ந்து, கேப்டன் தோனி பேசுகையில்," எதிரணி பேட்டர்களை கட்டுப்படுத்துவதற்கு எங்களுக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது என நினைக்கிறேன். நாங்கள் பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை அமைத்தோம். அதனால், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம்.

பௌலர்கள் கவனத்திற்கு: நாங்கள் வைத்த இலக்கும் சரியானதுதான். பந்துவீச்சின்போது, சுழற்பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவுக்கு பின் பந்துவீசுவது எங்களுக்கு கைக்கொடுத்தது. நீங்கள் 200 ரன்கள் எடுத்தாலும், இரண்டு ஓவர்களில் 24-25 ரன்களை எதிரணி அடிக்கும்போது, 18-19ஆவது ஓவரில் அது 175-180 ரன்களுக்கு கொண்டு வந்துவிடும்.

அதனால், பந்துவீச்சாளர்கள் எதையாவது புதிதாக முயற்சி செய்வது மிகவும் முக்கியமானது. நான் எப்போதுமே எனது பௌலர்களிடம் கூறுவேன், உங்கள் ஓவரில் 4 சிக்ஸர்கள் கூட போகலாம், ஆனால் மீதம் இருக்கும் 2 பந்துகளை நீங்கள் கட்டுப்பாடுடன் வேண்டும். அதிக இலக்கு உள்ள ஆட்டத்தில், அந்த 2 பந்துகள் வெற்றியடைய பெரிய அளவில் உதவும்.

ஏனென்றால், 3-4 சிக்ஸர்கள் போனவுடன் பந்துவீச்சாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டது என நினைப்பார்கள். சிக்ஸர்களுக்கு பதில் இரண்டு பவுண்டரிகள் கொடுத்தால் கூட அது நல்லதுதான். இதை பௌலர்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த தியரி மிகுந்த பயனை அளிக்கும்" என்றார்.

அவரிடமே விட்டுவிட்டேன்: நீங்கள் தொடர்ந்து ஜடேஜாவின் கேப்டன்ஸி குறித்து கேள்விக்கு,"ஜடேஜாவுக்கு கடந்த தொடரின்போதே, அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பு அவருக்குதான் கொடுக்கப்படும் என்பது தெரியும். மேலும், அவர் தயார் ஆவதற்கு தேவையான நேரமும் கிடைத்தது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், நான் ஜடேஜாவிடம் சில தகவல்களை பரிமாறிக்கொண்டேன். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் முக்கிய முடிவுகளை அவரிடமே விட்டுவிட்டேன்.

ஏனென்றால், தொடர் முடியும்போது கேப்டன்ஸியை தனக்கு பதில் வேறு யாரோ பார்த்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக. இது ஒரு படிப்படியான மாற்றம்தான். அனைத்தையும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பது கேப்டனுக்கு பயன்தராது. கேப்டனாக இருக்கும்போது, நீங்கள் களத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவுகளுக்கு நீங்கள் கண்டிப்பாக பொறுப்பேற்றாக வேண்டும்" என தெரிவித்தார்.

ருத்ராஜ் தாண்டவம்: முன்னதாக, சென்னை ஓப்பனிங் பேட்டர்களான ருதுராஜ் 99 ரன்களையும், கான்வே 85 ரன்களையும் எடுத்து சென்னை அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாக இருந்தனர். மேலும், ஆட்டநாயகனாக ருதுராஜ் தேர்வுசெய்யப்பட்டார். சென்னை பந்துவீச்சு தரப்பில் முகேஷ் சௌத்ரி முக்கியமான நேரங்களில் 4 விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார்.

அடுத்தது ஆர்சிபி: புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 6 தோல்வி) 9ஆவது இடத்திலும், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 தோல்வி) 4ஆவது இடத்திலும் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது. இப்போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் நாளை மறுதினம் (மே 4) நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Captain MSD Returns: தோனிதான் வாராரு.. மாற்றம் காணுமா மஞ்சள் படை.. முதல் சம்பவம் ஹைதராபாத்தா?

Last Updated :May 2, 2022, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.