ETV Bharat / sports

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தினேஷ் கார்த்திக்!

author img

By

Published : Oct 16, 2020, 6:19 PM IST

dinesh-karthik-stepped-down-as-kkr-captain
dinesh-karthik-stepped-down-as-kkr-captain

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அதிக பங்களிக்கும் விதமாக எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதால், கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்றிரவு (அக்.16) நடக்கவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் தினேஷ் கார்த்திக், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவருக்கு பதிலாக கேப்டன்சி பொறுப்பை இயான் மோர்கன் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றும், 4 போட்டிகளில் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் முக்கிய தருணங்களில் சொதப்பி வந்த நிலையில், கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முக்கிய நேரங்களில் பல அதிரடியான முடிவுகளை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.

அதிலும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைனை பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் இவரால் அடையாளம் காணப்பட்ட இளம் வீரர்கள் பலரும் கேகேஆர் அணிக்காக சிறப்பாக ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில் கேகேஆர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். இதுகுறித்து அணி நிர்வாகம், '' தினேஷ் கார்த்திக் மற்றும் இயன் மோர்கன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்தத் தொடரில் சிறப்பாக பணியாற்றினர். இந்நேரத்தில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என நினைத்தது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அணிக்காக அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என எண்ணுவதால், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிறோம். இதனால் இந்தப் போட்டியிலிருந்து இயன் மோர்கன் கேப்டன் பொறுப்பை மேற்கொள்வார்'' எனத் தெரிவித்துள்ளது.

கம்பீருக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், திடீரென கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தோனியின் அக்ரஸிவ்; முடிவை மாற்றிய அம்பயர்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.