விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையில் தனிப்படை போலீசார், சேத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர்.
இந்த நிலையில், சேத்தூர் பகுதியில் சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் சாவடி தெருவைச் சேர்ந்த திமுக முன்னால் ஒன்றிய துணைச் செயலாளர் அனந்தப்பனின் மகன் ராம் அழகு (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர், யானை தந்தங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சிவகாசி பொறுப்பு வனத்துறை ரேஞ்சர் பூவேந்தனிடம் ராம் அழகையும், பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களையும் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள், ராம் அழகரிடம் மேற்கொண்ட விசாரணையில், கணபதி சுந்தரநாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (35) என்பவரும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், செல்லையா என்பவரையும் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில நாட்களுக்கு முன்பு வரை செல்லையா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில், வேறு யாருக்காவது யானை தந்தங்கள் விற்பனையில் தொடர்பு உள்ளதா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 38 கிலோ சிக்கனை ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவகத்தின் உரிமம் ரத்து; தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி!