ETV Bharat / sports

சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சூர்யா..! அலப்பறை கிளப்பிய அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 2:52 PM IST

actor-surya-bought-chennai-team-in-ispl-t10-series
கிரிக்கெட்டில் கால்தடம் பதிக்கும் நடிகர் சூர்யா.

ISPL: ஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: இந்தியாவில் ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற தொடர்கள் மூலம் டி20 கிரிக்கெட் தொடர் பிரபலமானதை போல சமீப காலமாக 10 ஓவர்கள் கொண்டு நடத்தப்படும் டி10 தொடர்களும் பிரபலமாகி வருகின்றது. அந்த வகையில் இந்த தொடர் இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது.

ஐ.எஸ்.பி.எல் (ISPL) என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணியை நடிகர் அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை நடிகர் அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியைத் தெலுங்கு நடிகர் ராம் சரணும் வாங்கி உள்ளனர்.

ஆனால், கொல்கத்தா மற்றும் சென்னை அணியின் உரிமையாளர்கள் யார் என்பதை மட்டும் ரகசியமாக வைத்து இருந்த நிலையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் யார் என்பதை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

இது குறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “வணக்கம் சென்னை! ISPL T10இல் எங்கள் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களும் இணைந்து சிறந்த கிரிக்கெட்டின் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் இந்த புது அவதாரத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ISPL) என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு விளையாடக்கூடிய ஒரு லீக் போட்டியாகும்.

இதில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டி ஐபிஎல் போல பிரபலம் அடையுமா? என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: 5 நாட்களில் ரூ.400 கோடி..! வசூலை வாரி குவிக்கும் சலார் திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.