ETV Bharat / entertainment

5 நாட்களில் ரூ.400 கோடி..! வசூலை வாரி குவிக்கும் சலார் திரைப்படம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 2:01 PM IST

Updated : Dec 27, 2023, 3:29 PM IST

Salaar Box Office Collection
சலார் பாக்ஸ் ஆஃபீஸ்

Salaar Box Office Collection: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கேஜிஎஃப் பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சலார்'. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ் தவிர்த்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.22ஆம் தேதி திரையரங்குகளில் 'பான் இந்தியா' முறையில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘சலார்’ பெற்றுள்ளது. மேலும், இப்படம் வெளியான இரண்டாவது நாளில் ரூ.297.7 கோடியை வசூல் செய்தது. மூன்றாம் நாளில் மொத்தம் இந்தியாவில் மட்டும் ரூ.62.05 கோடியை வசூலித்துள்ளது. திங்கட்கிழமையன்று இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ரூ.41.24 கோடியை வசூலித்துள்ளது.

முதல் நான்கு நாட்களைக் காட்டிலும், 5 ஆம் நாள் வசூல் குறைந்தாலும் மற்ற படங்களை ஒப்பிடும்போது, மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. 5வது நாளில் பிரபாஸின் இந்தியா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ரூ.25.13 கோடி வசூலித்துள்ளதாக sacnilk.com தெரிவித்துள்ளது.

இது மட்டுமில்லாமல் தொடர்ந்து வசூல் ரேஸில் முன்னேறி வருகிறது, சலார். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் உலக அளவில் இத்திரைப்படம் ரூ.400 கோடியைத் தாண்டியுள்ள இப்படம் வரும் நாட்களில் ரூ.500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலியைத் தவிர்த்து அடுத்தடுத்த படங்கள், பிரபாஸ்ஸிற்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், சலார் திரைப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சலார் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சலார் திரைப்படம் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபாஸிற்கு சலார் படத்தைத் தொடர்ந்து கல்கி, மாருதி, ஸ்பிரிட் மற்றும் சலார் 2ஆம் பாகம் என வரிசையாக நிறையப் படங்கள் உள்ளதால், அவரது சம்பளத்தை ரூ.150 கோடிக்கு மேல் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: "என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" - நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி!

Last Updated :Dec 27, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.