ETV Bharat / international

El Nino: கொதிக்கும் உலகம்; வெப்பநோய்களிலிருந்து தப்புவது எப்படி? 'எல் நினோ' விளைவு என்றால் என்ன?

author img

By

Published : Jul 10, 2023, 9:01 PM IST

Etv Bharat
Etv Bharat

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல்-நினோ' புவியியல் மாற்றத்தால் மலேசியா மற்றும் ஆசிய நாடுகள் பல வெப்பம் மற்றும் அதித மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கோலாலம்பூர்: எல்-நினோ(El Nino) இந்த வார்த்தை பலரும் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவற்றின் பாதிப்பை உலக நாடுகள் மொத்தமும் எதிர்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு அமைப்பு அறிக்கை: கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல்-நினோ பாதிப்பை தொடர்ந்து தற்போது மீண்டும் அதன் தாக்கம் தனது தாண்டவ ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மலேசியாவின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்படும் நிலை புவி வெப்பம் அடைந்து வருவதாகவும் இதனால் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ பாதிப்பு உருவாகி வருவதாகவும் எச்சரித்துள்ளது.

மலேசிய சுகாதாரத்துறையின் தகவல்: இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மலேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும், மழைப்பொழிவு முற்றிலும் குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எல்-நினோ தாக்கத்தின் வெப்பம் சார்ந்த நோய்களால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 23 பேர் வெப்பத்தினால் ஏற்படும் சோர்வாலும், 11 பேர் வெப்ப கட்டிகளாலும், 5 பேர் பக்கவாதம் போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெப்பத்தால் மனிதர்கள் மட்டும் அல்ல ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், எல்-நினோ காரணத்தால் ஏற்பட்டுள்ள வெப்பத்தால் மக்கள் மத்தியில், மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதீத வெப்பத்தால் உடலில் அதீத வியர்வை, மனக்குழப்பம், வறண்ட சருமம் மற்றும் வெப்பத் தடிப்புகள் போன்றவற்றையும் உடலில் வளர்சிதை மாற்றத்தையும் மக்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

(WMO)உலக வானிலை அமைப்பின் அறிக்கை: இது குறித்து உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வெயிலின் தாக்கம் இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், வெயிலில் வேலை செய்யும் நபர்கள் அதிக நேரத்தை அங்கு செலவிட வேண்டாம், தேவைக்கு குடையை கையில் எடுத்த செல்ல வேண்டும், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிற்க வேண்டும், உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஆய்வாளர்களின் அறிக்கை: வெயிலின் தாக்கத்தால், நைட்ரஜன்-டை-ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் ஓசோன் துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் சுவாச அமைப்புகளை பாதிக்கும் எனவும் இது ஆஸ்துமா தாக்குதலை தூண்டி, சுவாச தொற்று அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது சிறந்தது என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹெய்லர்களை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தூசிகள் அண்டாதவாறு காற்று சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மக்கள் தங்கள் அதிக நேரத்தை வீட்டில் செலவிடுவதன் மூலமும், பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதன் காரணத்தாலும் பொருளாதார பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் உளவியல் மற்றும் மன அழுத்ததால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டு வரும் மலேசிய அரசாங்கம் இது குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும் எங்கள் அறிக்கை உண்மையானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எல் நினோ பாதிப்பால் வெப்பம் மட்டுமல்ல, மழையும் அசாதாரணமாகத்தான் இருக்கும். இதனால் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நோய்க்கிருமிகளின் அளவுகள் மற்றும் சூழலியலை மாற்றுகிறது.

இது மக்களின் செரிமான பிரச்னைக்கும் வழிவகை செய்யும் இதனால் ஒவ்வொருவரும் சுய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சரியான உறக்கத்தை கடைபிடிப்பது, நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது போன்ற விஷயங்களில் மக்கள் கவனவம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநரின் தகவல்: தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மலேசிய வானிலை ஆய்வு மைய வளிமண்டல அறிவியல் மற்றும் மேக விதைப்பு பிரிவுத் தலைமை உதவி இயக்குநர் மோகன்குமார் சிம்மாதிரி, "மலேசியா தற்போது எல்-நினோவின் தொடக்க காலக்கட்டத்தில் இருப்பதால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றும், அண்மை காலமாக மலேசியாவில் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிந்தாலும், அதன் அளவு 33 செல்சியஸ் ஆகவே பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களைக் காட்டிலும் குறைவான பதிவு என்று கூறிய மோகன்குமார், இப்பருவ காலத்தில் மழையும் குறைவாகவே உள்ளதால் இயல்பாகவே வெப்பமும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நினோ அளவு மிதமான பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவை கண்டறிய 5 நிமிடம் போதுமா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் விந்தை கண்டிபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.