ETV Bharat / international

உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தம் ரஷ்யா... உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்?

author img

By

Published : Jul 17, 2023, 4:38 PM IST

Russia
Russia

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போர்க் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் முடிவால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன் : உக்ரைனில் இருந்து ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய போர்க் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் முடிவால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து, மீண்டும் பசி, பட்டினி பஞ்சம் உள்ளிட்ட சூழலுக்கு மக்கள் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளினில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேறிய பின் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை உலக நாடுகளுக்கு விநியோகிப்பதில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.

உக்ரைனின் கடல் போக்குவரத்தை ரஷ்யா தன் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததால் உலகளாவிய உணவு பொருட்கள் விநியோக சங்கிலி அறுபட்டது. ஐநா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவில் இருந்து உணவு மற்றும் உரங்கள் பல்வேறு நாடுகளுக்கு கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்நிலையில், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு மீதான பல்வேறு கட்டுப்பாடுகளால் ரஷ்யக் கப்பல்கள் மேற்கொண்டு இயங்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், உரங்கள் ஏற்றுமதி தடைபட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த மே மாதம் ரஷ்யக் கப்பல்களின் காப்பீட்டு ஒப்பந்தங்கள் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த ஒப்பந்தங்கள் காலாவதியானதாக கூறப்படும் நிலையில் அதை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக போர்க் காலத்தில் உக்ரைனில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், உக்ரனை காட்டிலும் கடந்த காலங்களில் ரஷ்யாவில் இருந்தே கோதுமை, உணவுப் பொருட்கள், உரம் உள்ளிட்டவை உச்சம் தொடும் அளவுக்கு அதிகளவில் ஏற்றுமதியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், உணவு விநியோக ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை உருவாக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Meteorite: மொட்டை மாடியில் காஃபி குடித்த பெண்... விடாமல் விரட்டிய விண்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.